“ரொம்ப ரொம்ப Sorryம்மா... தைரியமா இருங்க” அஜித்குமாரின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் ஆறுதல்
சிவகங்கையில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் அஜித்குமார் உயிரிழந்த வழக்கு, கொலை வழக்காக மாற்றப்பட்ட நிலையில், பிரபு, கண்ணன், சங்கரமணிகண்டன், ராஜா, ஆனந்த் ஆகிய 5 தனிப்படை காவலர்கள் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். அவர்களை வரும் 15ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. இதனிடையே, இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றம் செய்ய அரசியல் தலைவர்கள் வலியுறுத்தி வரும் நிலையில், சிபிசிஐடிக்கு மாற்றம் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த வழக்கில் தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை அமர்வு அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்துள்ளது. எதிர்க்கட்சிகளும் கடுமையாக கண்டனங்களை வைத்து வருகின்றன.
காவல் துறை விசாரணையின்போது உயிரிழந்த அஜித்குமாரின் குடும்பத்தினருக்கு, அமைச்சர் பெரிய கருப்பன் நேரில் ஆறுதல் தெரிவித்தார். அப்போது முதல்வர் ஸ்டாலின், அஜித்குமாரின் தாயார் மற்றும் சகோதரரிடம் தொலைபேசி வாயிலாக பேசினார். இதனைத்தொடர்ந்து பேசிய அஜித்குமாரின் தாயார், முதல்வர் தங்களிடம் வருத்தம் தெரிவித்ததாக கூறினார்.
இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது, “திருப்புவனம் இளைஞருக்கு நடந்த கொடுமை யாருக்கும் நடக்கக் கூடாதது, யாராலும் நியாயப்படுத்த முடியாத தவறு!
கடமை தவறிக் குற்றம் இழைத்தவர்களுக்கு நிச்சயம் இந்த அரசு தண்டனை பெற்றுத் தரும்! பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ஆறுதலாக நிற்கும்!” எனத் தெரிவித்திருக்கிறார்.