தமிழகம் முழுவதும் நேற்று 14 இடங்களில் வெயில் சதம் அடித்த நிலையில், மாலையில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்துள்ளது.
கடந்த ஆண்டு தமிழ்நாட்டில் மழை பொய்த்துப்போனது. வழக்கமாக பெய்யும் மழையை விட, மிகக் குறைந்த அளவே மழை பெய்தது. குறிப்பாக சென்னையில் ஓரிரு நாட்கள் மட்டுமே மழை பெய்தது. இதனால் தமிழகம் முழுவதும் இந்த ஆண்டு தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. சென்னையில் குடிநீர் திண்டாட்டம் தொடங்கிவிட்டது என்றே கூறலாம். இதனை சரிசெய்யும் வகையில் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் நேற்று கடும் வெப்பம் நிலவிய போதும் மாலையில், பல்வேறு இடங்களில் கனமழை பெய்தது. கிருஷ்ணகிரி, ஓசூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரம் சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது. மதுரை, காளவாசல், பழங்காநத்தம் உள்ளிட்ட பகுதிகளில் இடி மின்னலுடன் கனமழை பெய்தது. மேலும் திருவள்ளூர் மாவட்டத்தில், காற்றுடன் ஆலங்கட்டி மழை பெய்தது. இதன் காரணமாக சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் மின் கம்பங்கள் சாய்ந்து, சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டது. இதனிடையே தமிழகம் முழுவதும் நேற்று 14 இடங்களில் வெயில் சதம் அடித்தது. அதிகபட்சமாக திருத்தணியில் 112 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவானது. பகலில் கடும் வெப்பம் நிலவினாலும், நேற்று மாலை சென்னை உள்ளிட்ட நகரங்களில் இதமான சூழல் நிலவியது. இதனால் இரவு நேரங்களில் ஒரு சில இடங்களில் மழை பெய்தது.