ஆரணி: 2 மாதமாக சம்பளம் கொடுக்காததால் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட தூய்மை பணியாளர்கள்

ஆரணி: 2 மாதமாக சம்பளம் கொடுக்காததால் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட தூய்மை பணியாளர்கள்
ஆரணி: 2 மாதமாக சம்பளம் கொடுக்காததால் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட தூய்மை பணியாளர்கள்

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி நகராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கு கடந்த இரண்டு மாத காலமாக சம்பளம் வழங்கப்படாமல் இருந்துள்ளது. இதைக் கண்டித்து ஆரணியின் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு அவர்கள் அனைவரும் போராட்டம் நடத்தினர்.

ஆரணி நகராட்சி, திருவண்ணாமலை மாவட்டத்தில் பெரிய நகராட்சி பகுதியாக திகழ்ந்து வருகிறது. ஆரணி நகராட்சி பகுதியில் 33 வார்டுகள் உள்ளன. அவற்றில் 156 தூய்மை பணியாளர்கள் பணிபுரிகின்றனர். இவர்கள் தினமும் காலை 6 மணி முதல் 11 மணி வரை அப்பகுதியிலுள்ள குப்பைகளை வாரி அகற்றி, அப்பகுதியை தூய்மைப்படுத்தி வருகின்றனர். இவர்களுக்கு கடந்த 2 மாதமாக நகராட்சி பகுதியில் சம்பளம் வழங்கப்படாமல் இருந்துள்ளது.

சம்பளம் வழங்கப்படாததால், வாழ்வாதாரத்தையே தொலைத்து சிரமப்படுவதாக கூறி, இன்று காலை ஆரணி நகராட்சி அலுவலகத்தில் அவர்கள் போராட்டம் நடத்தினர். இவர்களுடன் இணைந்த பொறியியல் அலுவலக ஊழியர்கள், தங்களுடைய  சம்பள பாக்கிகளையும் தருமாறு கேட்டனர். அனைவரும் இணைந்து, “ஆரணி நகராட்சி நிர்வாகம் உடனடியாக எங்களுக்கு சம்பளத்தை வழங்க வேண்டும்” எனக் கூறி, நகராட்சி அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.

போராட்டத்தின்போது நகராட்சி ஆணையாளர் ராஜ விஜய காமராஜை, பணியாளர்கள் அனைவரும் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

பின்னர் அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்ட பணியாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அதிகாரிகள் தரப்பில், “கொரோனா காலம் என்பதால், ஆரணி நகராட்சி பகுதியில் சரியாக வரி வசூல் ஆகவில்லை. ஆகவே உங்களுக்கு வழங்க வேண்டிய சம்பள பாக்கியை வழங்க அரசு சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. விரைவில் சம்பளம் கிடைக்க வழிவகை செய்யப்படும்” எனக்கூறப்பட்டது.

அதிகாரிகளின் அந்த உத்தரவாதத்தின் அடிப்படையில் தங்களுக்கு விரைவில் சம்பளம் கிடைக்கப்பெறும் என்ற எதிர்ப்பார்ப்போடு, நம்பிக்கையுடன் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். வேதனையுடன் புறப்பட்டு சென்ற ஊழியர்களுக்கு விரைந்து அவர்களின் ஊதியம் கிடைக்குப்பெறுமா என பொருத்திருந்து பார்க்கலாம்.

- எஸ். இரவி

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com