சிறுவனுக்கு சிகிச்சை அளித்த துப்புரவு பணியாளர்
மதுரை மாவட்டம் மேலூர் அருகே ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர்கள், செவிலியர் இல்லாத காரணத்தால், அங்கு துப்புரவு பணி செய்யும் பெண், காய்ச்சல் பாதித்த சிறுவனுக்கு சிகிச்சை அளித்ததாக புகார் எழுந்துள்ளது.
மேலூரை அடுத்த கருங்காலக்குடி ஆரம்ப சுகாதார நிலையத்தில் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு, துப்புரவு பணியாளரான பொன்னுத்தாய் என்பவர் ஊசி போட்டு, காய்ச்சலுக்கான மருந்தை சிறுவனின் தந்தையிடம் வழங்கியதாக புகார் கூறப்படுகிறது. 24 மணி நேரம் இயங்க வேண்டிய ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு மருத்துவர்கள், செவிலியர் உரிய நேரத்தில் பணிக்கு வராததால்தான், இது போன்ற நிலை ஏற்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதனிடையே சம்பவம் குறித்து விசாரிக்கப்பட்டு, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என புதிய தலைமுறையிடம் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். நோயாளிகளுக்கு ஊழியர்கள் சிகிச்சையளித்தால் பணிநீக்கம் செய்யப்படுவார்கள் என்று மதுரை மாவட்ட சுகாதாரப் பணிகள் இணை இயக்குநர் எச்சரித்துள்ளார். காய்ச்சல் பாதித்த சிறுவனுக்கு துப்புரவு பணியாளர் ஊசி போட்டு சிகிச்சை அளித்தது குறித்த கேள்விக்கு மதுரை ஆட்சியர் பதிலளிக்க மறுத்துவிட்டார்.