சிதம்பரம் நடராஜர் கோவில் நாட்டியாஞ்சலியில் உலகச் சாதனை !
ஒவ்வொரு ஆண்டும் மஹா சிவராத்திரியை முன்னிட்டு சிதம்பரம் நடராஜர் கோவிலில், நாட்டியக் கலைஞர்கள் ஒன்று சேர்ந்து நடனமாடுவது வழக்கம். இந்த ஆண்டு கொஞ்சம் வித்தியாசமாக தமிழ்நாடு மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் இருந்து நடனக் கலைஞர்களை வரவழைத்து உலக சாதனை நிகழ்ச்சியை அரங்கேற்ற திட்டமிட்டனர், கோவில் நிர்வாகம்.
இன்று (03.03.2019) சிதம்பரம் நடராஜர் கோவிலில் அரங்கேறிய நாட்டியாஞ்சலி உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றது. இதற்கு நாடு முழுவதிலும் இருந்து பத்தாயிரத்திற்கும் அதிகமானோர் குறிப்பாக 5 வயதுக்கும் மேற்பட்ட நாட்டியக் கலைஞர்கள் பங்கேற்று நடனமாடினர்.
சிதம்பரம் நடராஜர் கோவிலின் ஆயிரங்கால் மண்டபத்தில் நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதனைக் காண லட்சத்திற்கும் அதிகமான பொதுமக்கள் கோவிலில் வளாகத்திற்குள் இருப்பதால் போலீஸ் பாதுகாப்பை அதிகரித்தது, கோவில் நிர்வாகம். இந்த நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி உலக சாதனை பட்டியலில் இடம்பெறும் வகையில் கிட்டத்தட்ட 18 நிமிடங்கள் நடத்தப்பட்டது.
ஏற்கனவே இதுபோல சென்னையில் உள்ள தனியார் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற உலக சாதனை நாட்டியாஞ்சலி நிகழ்ச்சியில் 5,425 பேர் கலந்து கொண்டு உலக சாதனை படைத்ததாக கூறப்படுகிறது. இதனை முறியடிக்கவே சிதம்பரம் நடராஜர் கோவிலில் உலக சாதனைக்கான நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி அரங்கேற்றம் நடைபெற்று 7,190 பேர் ஒரே நேரத்தில் நடனமாடி உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது, குறிப்பிடத்தக்கது.