தண்ணீர் குடிக்கச் சென்ற 5ஆம் வகுப்பு மாணவன் மயங்கி விழுந்து உயிரிழப்பு – காரணம் என்ன?

தண்ணீர் குடிக்கச் சென்ற 5ஆம் வகுப்பு மாணவன் மயங்கி விழுந்து உயிரிழப்பு – காரணம் என்ன?
தண்ணீர் குடிக்கச் சென்ற 5ஆம் வகுப்பு மாணவன் மயங்கி விழுந்து உயிரிழப்பு – காரணம் என்ன?

திருச்செந்தூர் அருகே 5ஆம் வகுப்பு மாணவன் உயிரிழந்திருக்கிறார். மாணவனின் பெற்றோர்கள் உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

திருச்செந்தூர் அருகே தோப்பூர் பகுதியில் அரசு ஆதி திராவிடர் தொடக்கப் பள்ளி செயல்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் தலைமை ஆசிரியரின் அறிவுறுத்தலின் படி பள்ளி மாணவர்கள் பள்ளியை சுத்தம் செய்வதற்காக அங்கு சென்றுள்ளனர். அப்போது குடிநீர் அருந்தச் சென்ற 5 ஆம் வகுப்பு மாணவன் அஜய் குமார் திடீரென கீழே விழுந்துள்ளார். இதில், மாணவனின் தலையில் பின் பக்கம் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து அந்த மாணவனை உடனடியாக திருச்செந்தூர் தனியார் மருத்துவமனைக்கு அங்கிருந்தவர்கள் கொண்டு சென்றுள்ளனர். அங்கு சிகிச்சை அளிக்க முடியாத காரணத்தால் மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மாணவன் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று இரவு அவர் உயிரிழந்தார்.

இதனிடையே பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள், மாணவனின் உடலை வாங்க மறுத்து பாளையங்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து இன்று தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் சம்பவம் நடந்த இடத்தை ஆய்வு மேற்கொண்டு அந்த சம்பவத்தன்று அஜய் குமார் உடன் இருந்த இரு சிறுவர்களிடம் விராசணை நடத்தினார்.

இந்நிலையில், வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டவில்லை. இதையடுத்து வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு அங்கிருந்தவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து வருவாய் கோட்டாட்சியர் புகாரி மற்றும் திருச்செந்தூர் துணை கண்காணிப்பாளர் ஆவுடையப்பன், திருச்செந்தூர் ஆய்வாளர் முரளிதரன் ஆகியோர் பொதுமக்களிடம், ஆசிரியர் கனகவள்ளியை தற்காலிக பணிநீக்கம் செய்து கைது செய்யப்பட்டு விசாரணை நடத்தப்படும் என்று வாக்குறுதி அளித்தார்.

இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதைத் தொடர்ந்து தூத்துக்குடி மாவட்ட கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் செய்தியாளர்களிடம் “பள்ளியில் சம்பவ நடைபெற்ற இடத்தை ஆய்வு செய்தேன். இதற்கு உரிய விசாரணை நடத்தப்படும். உடற்கூறு ஆய்வு அறிக்கை வந்தபிறகு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com