ஈரோடு இடைத்தேர்தலை நியாயமாக நடத்துங்கள் - நீதிமன்றத்தை நாடிய நாம் தமிழர் கட்சி!

ஈரோடு இடைத்தேர்தலை நியாயமாக நடத்துங்கள் - நீதிமன்றத்தை நாடிய நாம் தமிழர் கட்சி!
ஈரோடு இடைத்தேர்தலை நியாயமாக நடத்துங்கள் - நீதிமன்றத்தை நாடிய நாம் தமிழர் கட்சி!

ஈரோடு கிழக்கு தொகுதியில் நேற்று நடைபெற்ற மோதலை அடுத்து, தேர்தலை நியாயமாக நடத்த தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரி, நாம் தமிழர் கட்சி சார்பில் வைத்த அவசர கோரிக்கை தொடர்பான வழக்கை நாளை விசாரிப்பதாக சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ள நிலையில், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகாவை ஆதரித்து கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். நேற்று அதே பகுதியில் திமுகவினரும் வந்த நிலையில் இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் எழுந்து கைகலப்பாக மாறியது.

இந்த மோதலில் நாம் தமிழர் கட்சியினர் 12 பேர், திமுகவினர் 4 பேர் மற்றும் 3 போலீஸ் உள்ளிட்டோர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் சார்பில் வழக்கறிஞர்கள் சேவியர் பெலிக்ஸ், சங்கர் ஆகியோர், பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா மற்றும் நீதிபதி டி.பரத சக்கரவர்த்தி அமர்வில் முறையிட்டனர்.

அப்போது, தங்களை பிரச்சாரம் செய்ய அனுமதிப்பதில்லை எனவும், தாக்குதல் சம்பந்தமாக போலீசிலும், தேர்தல் அதிகாரிகளிடமும் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனத் தெரிவித்தனர். தேர்தலை நியாயமாக நடத்த உத்தரவிட வேண்டும் எனவும், தங்கள் புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட வேண்டும் எனவும் முறையிட்டனர்.

இதேபோல சுயேட்சை வேட்பாளர் கண்ணன் சார்பில் வழக்கறிஞர் தட்சிணாமூர்த்தி ஆஜராகி, ஈரோடு கிழக்கு தொகுதியில் பணப்பட்டுவாடா நடப்பதாகவும், அதற்கு ஆதாரம் இருப்பதாகவும், அதை தடுக்க நடவடிக்கை எடுக்கும்படியும் முறையிட்டார்.இரு முறையீடுகளையும் கேட்ட நீதிபதிகள், இதுசம்பந்தமாக மனுவாக தாக்கல் செய்யும்பட்சத்தில் நாளை (பிப்ரவரி 24) விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com