மதுரை மாவட்டம் திருமோகூர் காளமேகப் பெருமாள் கோவிலில் திருவிழா நடைபெற்று வருகிறது. அதில் நேற்று முன்தினம் ஆடல் பாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது இருதரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. இதனால் அந்தப் பகுதி முழுவதும் கலவரமாக மாறியது. ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டதோடு அந்த பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பைக்குகள் மற்றும் ஓட்டு வீடுகளை உடைத்து நொறுக்கினர் சிலர்.
இச்சம்பவத்தில், 36 பைக்குகள் 1 கார் சேதமாகியுள்ளன. மேலும் அதே பகுதியைச் சேர்ந்த மணிமுத்து, செந்தில்குமார், முத்துகுமார், பழனிகுமார் ஆகிய 4 பேர் காயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இருதரப்பு மோதலால் திருமோகூர் பகுதியில் பதற்றமான சூழல் நிலவிவருகிறது. நேற்று முழுவதும் அந்த பகுதி முழுவதும் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்துள்ள ஒத்தக்கடை போலீசார், விசாரணை நடத்தி வருகின்றனர்.