வேதாரண்யத்தில் இருதரப்பினரிடையே மோதல் - வாகனங்களுக்கு தீ வைப்பு
நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதல் காரணமாக காவல் நிலையம் மீது கல்வீசித் தாக்குதல் நடத்தப்பட்டது. ஒருதரப்பைச் சேர்ந்த 10 பேர் கும்பல் காவல் நிலையத்தின் மீது கல் மற்றும் உருட்டுக் கட்டைகளைக் கொண்டு தாக்குதல் நடத்தியது. இதில் 2 பேர் காயமடைந்தனர். மேலும் சாலையில் சென்று கொண்டிருந்த மற்றொரு தரப்பைச் சேர்ந்தவரின் காரை வழிமறித்து தீவைத்து எரித்தது.
தகவலறிந்து சென்ற தீயணைப்புத்துறையினர் தீயை அணைக்க முயன்றனர். அவர்களை வன்முறைக் கும்பல் தடுத்து நிறுத்தியதால் கார் முற்றிலும் எரிந்து சேதமானது. இதனையடுத்து மற்றொரு தரப்பைச் சேர்ந்தவர்கள் அம்பேத்கர் சிலையை உடைத்ததால் வேதாரண்யத்தில் பதற்றமான சூழல் நிலவுகிறது.
காவல் நிலையத்தில் இரண்டு காவலர்கள் மட்டுமே இருந்ததால் அவர்களால் கலவரக்காரர்களை தடுக்க முடியவில்லை. நிலைமை மோசமானதை அடுத்து வேதாரண்யத்தில் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். வேதாரண்யம் டி.எஸ்.பி. மற்றும் காவல் ஆய்வாளர் பணியிடங்கள் கடந்த ஒரு மாதமாக நிரப்பப்படாமல் இருப்பது குறிப்பிடத்தக்கது.