மதுரை: அதிமுக கள ஆய்வு கூட்டத்தில் செல்லூர் ராஜு, நத்தம் விஸ்வநாதன் முன் மோதிக்கொண்ட தொண்டர்கள்!
செய்தியாளர்: மணிகண்டபிரபு
அதிமுக கிளை, வார்டு, வட்டக் கழகங்கள் மற்றும் சார்பு அமைப்புகளின் பணிகள், செயல்பாடுகள் குறித்து நேரடியாக கள ஆய்வு செய்ய ‘கள ஆய்வுக் குழு’ ஒன்றை அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நியமித்தார்.
கட்சியின் பல்வேறு நிலைகளில் உள்ள கட்டமைப்புகளின் பணிகளை மேம்படுத்துவது குறித்தான கருத்துகளைப் பெற்றிடவும், புதுப்பிக்கப்பட்ட கட்சி உறுப்பினர் உரிமைச் சீட்டுகள் முழுமையாக கட்சி உறுப்பினர்கள் அனைவரிடமும் சென்றடைந்ததா என்பதை மாவட்ட வாரிய சென்று களஆய்வு செய்யவும் இந்த குழு செயல்பட்டு வருகிறது.
இதன்கீழ் மதுரை மாநகர அதிமுக செயல்பாடுகள் மற்றும் பணிகள் குறித்து கள ஆய்வுக் கூட்டம் மதுரை சந்தைப்பேட்டை பகுதியிலுள்ள தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத்தில் இன்று நடைபெற்றது.
இக்கூட்டத்தில் அதிமுக கள ஆய்வுக் குழுவை சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன் மற்றும் செம்மலை ஆகியோர் கலந்து கொண்டனர். வட்ட, பகுதி செயலாளர்களிடம் உறுப்பினர் சேர்க்கை கட்சி வளர்ச்சிப்பணிகள் குறித்து கேட்டறிந்தனர்.
இந்த நிலையில் கள ஆய்வுக்குழுவை சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன் மற்றும் செம்மலை ஆகியோரிடம் தங்களுடைய கருத்துக்களையும் கேட்க வேண்டும் என அதிமுகவை சேர்ந்த பைக்காரா செழியன், வைகை பாலன், ராமச்சந்திரன் உள்ளிட்டோர் மேடையில் ஏறி பேசினர். அப்போது ஆத்திரமடைந்த செல்லூர் ராஜுவின் ஆதரவாளர்கள் சிலர், அவர்களை மேடையை விட்டு கீழே இறங்குமாறு கூறினார். இதை அடுத்து இரு தரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட மோதல் அடிதடி மற்றும் கைகலப்பாக மாறியது. இதனால் அதிமுக கள ஆய்வு கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
நாடாளுமன்றத் தேர்தலில் தோல்வி குறித்தும், அதிமுக முன்னாள் அமைச்சரும் மாவட்ட செயலாளருமான செல்லூர் ராஜுவின் செயல்பாடுகளில் அதிருப்தி குறித்தும் தெரிவிக்க வந்த கட்சியினர், இருதரப்பாக மோதிக்கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதனை அடுத்து காவல்துறையினர் உள்ளே நுழைந்த நிலையில் “இது கட்சி பிரச்சனை காவல்துறையினர் வெளியே செல்லுங்கள்” என காவலர்களை முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் எச்சரித்தார். தொடர்ந்து மேடையில் அவர் பேசுகையில், “பிரச்னை இருந்தால் நேரடியாக சொல்லுங்கள். கேட்க தயாராக உள்ளோம். கட்சிக்கு கெட்ட பெயர் ஏற்படும் அளவிற்கு நடந்து கொள்ள வேண்டாம். இங்கே நடந்ததை ஓழுங்கீன செயலாகதான் கருத வேண்டும். இதுபோல நடந்து கொள்ளக்கூடாது ”என பேசினார்.
தொடர்ந்து முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன், செம்மலை ஆகியோர் கூட்டாக இணைந்து செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது பேசிய அவர், “அதிமுக நிர்வாகிகள் பேசுவதற்கு வாய்ப்பு கேட்டார்கள். கூட்டத்தில் பேசுவதற்கு வாய்ப்பு தரப்படும் என கூறினோம். வேறு எந்தவொரு பிரனையுமில்லை.
அதிமுக அமைப்பு ரீதியான செயல்பாடுகள் குறித்து கள ஆய்வு நடைபெறுகிறது அதிமுக கள ஆய்வு கூட்டத்தில் எந்த மோதலுமில்லை. அதிமுகவில் எந்த பிரச்னையும், சலசலப்பும் இல்லை. திமுக கூட்டணி உடையும் நிலையில் உள்ளது என உண்மையைதான் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பேசியுள்ளார்” என செம்மலை பேசினார். “திமுக கூட்டணி கட்சிக்குள் சலசலப்பு ஏற்பட்டு உள்ளதை மையப்படுத்தி எடப்பாடி பழனிச்சாமி பேசியுள்ளார்” என நத்தம் விஸ்வநாதனும் தெரிவித்தனர்.