”ஸ்டாலின், மம்தா தோற்றது எதேச்சையதானதல்ல..” கரப்பான் கட்சியின் அபிஜீத் கருத்து!
பாஜகவை தீவிரமாக எதிர்த்த முதல்வர்கள் SIR நடவடிக்கைக்கு பிறகு தோற்ற வாக்குகள் வித்தியாசம் ஏதேச்சையானது அல்ல என்று கரப்பான் ஜனதா கட்சியின் அபிஜீத் திப்கே கருத்து தெரிவித்துள்ளார்.
இந்தியன் எக்ஸ்பிரஸ் வெளியிட்ட தகவலின்படி, தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் மற்ற ஆணையர்களுக்கு தகவல் தராமல் ரகசியமாக செயல்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. SIR நடவடிக்கையால் வாக்காளர் பட்டியலில் பெரும் குளறுபடிகள் ஏற்பட்டதாகவும், நீதிமன்ற உத்தரவுகளும் புறக்கணிக்கப்பட்டதாகவும் கூறி, தேசிய கட்சிகள் மற்றும் மாநில கட்சிகள் தலைமை தேர்தல் ஆணையரை நீக்கி, SIR நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும் என கோருகின்றன.
தொடர்ந்து தேர்தல் தலைமை ஆணையர் மீதும், மத்திய அரசு மீதும் விமர்சனங்கள் வைக்கப்பட்டு வரும் நிலையில், தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் 48 மணி நேரத்துக்குள் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்... இல்லையென்றால், மீண்டும் நாடு முழுவதும் போராட்டம் நடத்தப்படும் என Cockroach Janta Party-யின் நிறுவனர் அபிஜீத் தீப்கே எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இவ்விவகாரம் குறித்து பேசியிருக்கும் அபிஜீத் தீப்கே, தேர்தல்களில் முறைகேடு நடந்துள்ளது. தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் இந்திய ஜனநாயகத்திற்கு மாபெரும் அச்சுறுத்தல். பாஜகவை தீவிரமாக எதிர்த்த முன்னாள் முதல்வர்கள் மு.க.ஸ்டாலின், மம்தா பானர்ஜி, அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோர் தோற்கடிக்கப்பட்டது எதேச்சையானது அல்ல. கொளத்தூர் தொகுதியில் ஒரு லட்சம் வாக்குகள் சிறப்பு தீவிர திருத்தத்தில் நீக்கப்பட்டபோது, 10 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் ஸ்டாலின் தோல்வியைத் தழுவினார். அதேபோல மம்தா போட்டியிட்ட தொகுதியில் 51 ஆயிரம் வாக்குகள் நீக்கப்பட்டபோது 15 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் அவர் தோல்வியடைந்தார். மேலும் அரவிந்த் கெஜ்ரிவால் போட்டியிட்ட தொகுதியில் 40ஆயிரம் வாக்குகள் நீக்கப்பட்ட நிலையில் 4 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் அவர் தோல்வியடைந்துள்ளார்’ என பேசியுள்ளார்.

