சென்னையின் பல்வேறு இடங்களில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளின் ஏடிஎம் இயந்திரங்களும், ஸ்வைப் மெஷின்களும் செயல்படாததால் பொதுமக்கள் அவதியடைந்துள்ளனர்.
மக்களின் பணபரிவர்த்தனைகளில் முக்கிய பங்காற்றுவது ஏடிஎம். பணத்தை மொத்தமாக கையில் வைத்திருப்பதால் பாதுகாப்பு இல்லை என்பதால் தேவைக்கேற்ப பணத்தை எடுத்து பயன்படுத்தும் விதத்தில் ஏடிஎம் இயந்திரங்கள் முக்கிய பங்காற்றுகின்றன. நகரம் , கிராமம் என்று ஏடிஎம்கள் அனைத்து இடங்களிலும் இருக்கின்றன. அனைத்து வங்கிகளும் மக்கள் பயனடையும் விதத்தில் முக்கிய இடங்களில் ஏடிஎம் இயந்திரங்களை வைத்துள்ளன. இப்படி ஏடிஎம் இயந்திரங்களை முழுமையாக மக்கள் நம்பிவிட்ட நிலையில் திடீரென்று ஏடிஎம் பரிவர்த்தனைகளில் ஏற்படும் பிரச்னைகள் மக்களின் அன்றாட வாழ்வை பெரிதும் பாதித்துவிடுகின்றன.
இந்நிலையில் சென்னையில் இந்தியன் வங்கி, இந்திய ஓவர்சீஸ் வங்கி, பாரத ஸ்டேட் வங்கி போன்ற தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளின் ஏடிஎம் மையங்கள் செயல்படவில்லை எனக் கூறப்படுகிறது. மாதத்தின் 2ஆவது சனிக்கிழமையான இன்று வங்கிகளுக்கும் விடுமுறை என்பதால், பணவரித்தனை செய்ய முடியாமல் செய்வதறியாது மக்கள் திகைத்துள்ளனர்.
கடைகளில் உள்ள ஸ்வைப் மெஷின்களும் வேலை செய்யாததால், அத்தியாவசிய பொருட்களை வாங்கச் சென்ற மக்கள் பணம் செலுத்த முடியாமல் தவித்து வருகின்றனர். தொழில்நுட்பக் கோளாறு காரணமாக காலை 7 மணி முதல் இப்பிரச்னை நிலவி வருவதாகத் தெரிகிறது. ஏடிஎம் மையங்கள் செயல்படாததால், முக்கியத் தேவைகளுக்கு பணம் எடுக்க முடியவில்லை என பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக விளக்கம் கேட்க சம்பந்தப்பட்ட வங்கி அதிகாரிகளை தொடர்புகொண்டபோது அவர்கள் அழைப்பை ஏற்கவில்லை. தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளைத் தவிர்த்து HDFC, ICICI போன்ற தனியார் வங்கிகளின் ஏடிஎம் மையங்கள் செயல்படுவதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.