கந்துவட்டி புகார்: சினிமா ஃபைனான்சியர் போத்ரா மகன்களுடன் கைது!
கந்துவட்டி புகாரில் சினிமா ஃபைனான்சியர் போத்ராவும் அவரது இரு மகன்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கந்துவட்டி கேட்டு மிரட்டி வருவதாக சினிமா பைனான்சியர் போத்ரா மீது சென்னை ஆவடியைச் சேர்ந்த சினிமா பட தயாரிப்பாளர் சதீஷ் புகார் அளித்திருந்தார். இதன்பேரில், மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் போத்ராவை கைது செய்து விசாரணை நடத்தினர். இதைத் தொடர்ந்து போத்ராவின் மகன்கள் ககன் போத்ரா மற்றும் சந்தீப் போத்ராவிடமும் காவல்துறையினர் விசாரணை நடத்தி பின்னர் அவர்களையும் கைது செய்தனர்.
20 லட்சம் ரூபாய் கடன் கொடுத்து விட்டு ஒரு கோடி ரூபாய் கேட்டு மிரட்டியதாக மணி என்பவர் அளித்த புகாரின் பேரில், 2006-ல் போத்ரா கைது செய்யப்பட்டிருந்தார். அந்த வழக்கு நிலுவையில் இருந்து வருகிறது.
சினிமா ஃபைனான்சியரான போத்ரா, பல்வேறு படத் தயாரிப்பாளர்களுக்கு கடன் அளித்து விட்டு கந்து வட்டி கேட்டு பிரச்னை செய்வதாக பரவலாக புகார்கள் கூறப்பட்டன. ரஜினிகாந்த் நடித்த லிங்கா படத்திற்கு நிதியுதவி செய்த போத்ரா, அதன் தயாரிப்பாளரிடம் பிரச்னை செய்ததாகவும் குற்றம்சாட்டப்பட்டது.