" சித்திரை திருவிழா நடந்தே தீரும்"- இந்து முன்னணியினர் ஒட்டியுள்ள போஸ்டரால் பரபரப்பு
மதுரையில் தடையை மீறி சித்திரை திருவிழா நடத்தப்படும் என இந்து முன்னணியினர் ஒட்டியுள்ள சுவரொட்டிகளால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கொரோனா பரவல் காரணமாக மதுரை சித்திரை திருவிழா இந்த ஆண்டும் கோயில் வளாகத்திலேயே நடைபெற உள்ளதாக மதுரை மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. குறிப்பாக மீனாட்சியம்மன் திருக்கல்யாணமும், கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவமும் கடந்த ஆண்டைபோலவே கோயில் வளாகத்தில் பக்தர்கள் பங்கேற்பு இன்றி நடைபெறும் என்று மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
இந்நிலையில் கொரோனா 2ஆம் அலை காரணமாக தமிழகத்தில் திருவிழா, மதம் சார்ந்த கூட்டங்களுக்கு தடை விதித்து புதிய கட்டுப்பாடுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில், சித்திரை திருவிழா கடந்த ஆண்டை போலவே உள்திருவிழாவாக நடைபெறும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ள நிலையில், இந்து முன்னணி அமைப்பினர் தடையை மீறி சித்திரை திருவிழா நடந்தே தீரும் என மதுரை மாநகர் பகுதிகளில் சுவரொட்டிகளை ஒட்டியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
குறிப்பாக அந்த சுவரொட்டியில் ‘தமிழக அரசே சித்திரை திருவிழாவை நடத்திடு கொரோனாவை விரட்டிடு எனவும், சித்திரை திருவிழாவை நடத்த விடாமல் தடை ஏற்படுத்தும் தமிழக அரசை கண்டிக்கிறோம், எத்தனை தடை போட்டாலும் இந்த ஆண்டு இந்துக்களின் பாரம்பரிய திருவிழாவான சித்திரை திருவிழா நடந்தே தீரும்' என இந்து முன்னணியினர் சுவரொட்டிகளை ஒட்டியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

