அருணாச்சலப் பிரதேச மாநிலத்தில், சீன எல்லை அருகே இந்திய ராணுவம் பிரம்மாண்டமான போர் பயிற்சிக்கு ஏற்பாடு செய்திருப்பதால், சீனா அதிருப்தி அடைந்திருப்பதாக கூறப்படுகிறது. இதனால், சீன அதிபரின் சென்னை பயணம் தாமதமாகலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்திய பிரதமர் மோடியும், சீன அதிபர் ஸீ ஜின்பிங்கும் வரும் 11-ஆம் தேதி சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் சந்தித்து இரு தரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்துகின்றனர். வரலாற்று சிறப்பு வாய்ந்த சந்திப்பாக இருக்க வேண்டும் என்பதால், வரலாற்று பின்னணி கொண்ட மாமல்லபுரத்தில் இந்தச் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.
இந்நிலையில், அருணாச்சலப் பிரதேசத்தில் இந்திய, சீன எல்லைப் பகுதி அமைந்திருக்கும் எல்லைக் கட்டுப்பாட்டு கோடு அருகே இந்திய ராணுவம் பிரம்மாண்டமான போர் பயிற்சிக்கு ஏற்பாடு செய்துள்ளது. ஹிம் விஜய் என்ற பெயரில் வரும் 7-ஆம் தேதி முதல் 10-ஆம் தேதி வரையும், பின்னர் 20-ஆம் தேதி முதல் 24-ஆம் தேதி வரையும் இருகட்டங்களாக மலையேற்ற பயிற்சி நடக்கவுள்ளது.
இந்நிலையில், இந்தியாவின் இந்த நடவடிக்கை, சீனாவுக்கு தவறுதலான சமிக்ஞையை அனுப்பியிருப்பதாக தெரியவந்துள்ளது. இதனால், இந்திய பயணத்தை சீன அதிபர் ஒத்திப்போட வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.