ஜெயலலிதாவிற்காக அலகு குத்திய சிறுவர்கள்: தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய வலியுறுத்தல்
ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது விரைவாக குணமடைய வேண்டி சென்னையில் சிறுவர்களுக்கு அலகு குத்தியது தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை அறிக்கையாக தாக்கல் செய்ய தேசிய மனித உரிமைகள் ஆணையம் வலியுறுத்தியுள்ளது.
காய்ச்சல் மற்றும் நீர்ச்சத்து குறைபாடு காரணமாக கடந்தாண்டு செப்டம்பர் மாதம் 22-ஆம் தேதி சென்னை அப்போலா மருத்துவமனையில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டார். ஜெயலலிதா விரைவில் குணமடைய வேண்டி அதிமுகவின் ஏராளனமான தொண்டர்கள் கோயில்களில் சிறப்பு வழிபாடுகளில் ஈடுபட்டனர். ஜெயலலிதா நலம்பெற வேண்டி, 20 சிறுவர்களுக்கு அலகு குத்தும் நிகழ்ச்சியும் சென்னை ஆர்.கே.நகரில் அக்டோபர் மாதம் நடைபெற்றது.
இதனிடையே, சிறுவர்களை அலகு குத்த நிர்பந்தித்தவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் என்று வட சென்னை கூடுதல் காவல் ஆணையரிடம் வலியுறுத்தியுள்ள மனித உரிமைகள் ஆணையம், அந்த நிகழ்ச்சியில் பாதுகாப்புப் பணியில் இருந்த காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்யவும் கேட்டுக்கொண்டுள்ளது. இதுகுறித்து தமிழக உள்துறை முதன்மை செயலாளர் 4 வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்யவும் தேசிய மனித உரிமைகள் ஆணையம் வலியுறுத்தியுள்ளது.