13 வருடங்களாக குழந்தை இல்லை - விரக்தியில் கணவன் மனைவி எடுத்த விபரீத முடிவு

13 வருடங்களாக குழந்தை இல்லை - விரக்தியில் கணவன் மனைவி எடுத்த விபரீத முடிவு
13 வருடங்களாக குழந்தை இல்லை - விரக்தியில் கணவன் மனைவி எடுத்த விபரீத முடிவு

13 வருடங்களாக குழந்தை இல்லாத காரணத்தால், கணவன் மனைவி இருவருக்கும் மனஸ்தாபம் முற்றிய நிலையில், இருவரும் எடுத்த விபரீத முடிவு சென்னை புளியந்தோப்பில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை புளியந்தோப்பு சாஸ்திரி நகர் 6ஆவது தெருவைச் சேர்ந்தவர் சக்திவேல்(45). இவரது மனைவி துலுக்கானம்(35). கணவன், மனைவி இருவரும் சென்னை மாநகராட்சி 128 வது வார்டில் (மாங்காடு) ஒப்பந்த அடிப்படையில் துப்பரவு தொழிலாளர்களாக வேலைபார்த்து வந்தனர்.

இந்நிலையில் சக்திவேல் மற்றும் துலுக்கானம் தம்பதிக்கு திருமணமாகி 13 ஆண்டுகளான நிலையில், இதுவரை குழந்தை பாக்கியம் இல்லை. இதனால் கணவன், மனைவி இடையே அவ்வப்போது தகராறு ஏற்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த 25 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை வழக்கம்போல இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து கடந்த 3 நாட்களாக கணவன், மனைவி இருவரும் வீட்டில் இருந்து வெளியே வராததால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் இன்று காலை புளியந்தோப்பு காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்ததன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று பாரத்தபோது வீட்டு உட்புறமாக தாழ்ப்பாள் போட்டு இருந்ததால் கதவை உடைத்து உள்ளே சென்றனர்.

அங்கு கட்டிலில் துலுக்கானம் இறந்த நிலையிலும், சக்திவேல் தூக்கில் தொங்கியபடியும் உயிரிழந்து இருந்ததைப் பார்த்து இருவரது உடலை மீட்டு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் இச்சம்பவம் குறித்து புளியந்தோப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் குழந்தை இல்லாத விரக்தியில் கணவன் மனைவி தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது. மேலும் சகதிவேல் மனைவி துலுக்கானத்தை கொலைசெய்து விட்டு தற்கொலை செய்துகொண்டாரா? அல்லது துலுக்கானம் விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்டாரா? என்பது பிரேத பரிசோதனைக்கு பின்னரே தெரியவரும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com