பணத்திற்காக விற்கப்பட்ட குழந்தை - புகார் அளித்த ஒரு மணி நேரத்தில் மீட்ட மதுரை கலெக்டர்

பணத்திற்காக விற்கப்பட்ட குழந்தை - புகார் அளித்த ஒரு மணி நேரத்தில் மீட்ட மதுரை கலெக்டர்
பணத்திற்காக விற்கப்பட்ட  குழந்தை - புகார்  அளித்த ஒரு மணி நேரத்தில் மீட்ட மதுரை கலெக்டர்

பணத்திற்காக விற்கப்பட்ட குழந்தையை ஒருமணி நேரத்தில் கண்டுபிடித்து தந்தையிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுத்த மதுரை ஆட்சியருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

நாகப்பட்டினம் மாவட்டம் நாகூர் கோசா மரைக்காயர் தெருவைச் சேர்ந்தவர்கள் அஷரப் அலி-நிர்மலா பேகம் தம்பதியினர். இவர்களுக்கு மூன்றரை வயதில்
மும்தாஜ் பேகம் என்ற மகளும், ஒன்றரை வயதில் ராஜா உசைன் என்ற மகனும் உள்ளனர். இந்நிலையில் அஷரப் அலியுடன் நிர்மலா பேகத்திற்கு ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக அவர் குழந்தைகளை வீட்டிலேயே விட்டு விட்டு தனது அம்மா வீட்டிற்குச் சென்றுள்ளார்.

இந்நிலையில் குழந்தைகளை கவனித்துக்கொள்ள முடியாமால் தவித்த அஷரப் அலி, இரண்டு மாதங்களுக்கு முன்பு தனது நெருங்கிய நண்பரான நாகூரைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் அசைன் முகமதுவிடம், தனது மூன்றரை வயது பெண் குழந்தையை மூஸ்லீம் குழந்தைகளை பாதுகாக்கும் மதர்சாவில் சேர்க்க உதவி செய்யுமாறுக் கேட்டுள்ளார். இதனை பயன்படுத்திக்கொண்ட அசைன் முகமது அஷரப் அலியின் மகளை மதர்சாவில் சேர்த்து விடுவதோடு, அவரை படிக்க வைக்கவும் உதவி செய்வதாக நம்பிக்கை வார்த்தைகளை கூறி அஷரப் அலியின் மகளை கோவில்பட்டியைச் சேர்ந்த குடும்பம் ஒன்றிற்கு 1 லட்சத்து 35 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளார்.

தனது குழந்தை விற்கப்பட்டது கூட தெரியாத அஷரப் அலி, குழந்தையை பார்க்க அழைத்துச் செல்லுமாறு அசைன் முகமதுவிடம் பலமுறை கேட்டுள்ளார்.ஆனால் ஒவ்வொரு முறையும் பல்வேறு காரணங்களை கூறி தவிர்த்து வந்துள்ளார் அசைன். இதனையடுத்து பொறுமை இழந்த அஷரப் ரம்ஜான் அன்றாவது தனது குழந்தையை பார்க்க வேண்டும் எனக்கூறி அசைன் முகமதுவை தொந்தரவு செய்துள்ளார். இதனையடுத்து இறுதியாக குழந்தை மதுரை நெல்பேட்டையில் உள்ள மதர்சாவில் இருப்பதாக அசைன் முகமது கூறியுள்ளார்.



இந்நிலையில் தனது மூன்றரை வயது மகளை பார்க்க நாகூரிலிருந்து திருவாரூர் வரை தனது ஒன்றரை வயது மகனை தோளில் சுமந்தபடி நடந்தே வந்துள்ளார் அஷரப். இதனையடுத்து திருவாரூரில் தனக்குத் தெரிந்தவர்களிடம் உதவி கேட்க அவர்கள் அஷரப் அலியையும், குழந்தையையும் கார் மூலமாக மதுரையில் இறக்கி விட்டுள்ளனர்.

மதுரை நெல்பேட்டைக்கு வந்த அஷரப், அசைன் கூறிய இடத்திற்குச் சென்று பார்த்துள்ளார். ஆனால் அங்கு குழந்தை இல்லை. உடனே அசைன் முகமதுவை தொடர்பு கொண்டு, குழந்தை குறித்து கேட்ட போது குழந்தையை தான் விற்று விட்டதாகவும், குழந்தை இருக்கும் இடம் தனக்கு தெரியாது எனவும், குழந்தையை கேட்டு போன் செய்தால் காவல்துறையில் புகாரளித்து சிறைக்கு அனுப்பி விடுவதாகவும், உன்னால் முடிந்ததை பார்த்துக்கொள் என மிரட்டியுள்ளார்.

இந்நிலையில் மதுரை ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த அஷரப் அலி, மாவட்ட ஆட்சியரிடம் நடந்ததை கூறியுள்ளார். பல மைல் தூரம் நடந்து வந்த அஷரப் அலிக்கும், அவருடைய ஒன்றரை வயது குழந்தைக்கும் ஆட்சியர் அலுவலகத்தில் உணவு வழங்கி தங்க வைப்பதற்கான ஏற்பாடுகளை செய்த ஆட்சியர் வினய், குழந்தையை மீட்க மதுரை காவலர்களுக்கு உத்தரவிட்டார்.

மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் அசைன் முகமதுவை போனில் தொடர்புகொண்ட மதுரை காவலர்கள் குழந்தை இருக்கும் இடத்தை கேட்டுள்ளனர். காவல்துறைக்குப் பயந்த அசைன் குழந்தை கோவில்பட்டியில் இருப்பதாக கூறியுள்ளார். இதனையடுத்து தகவல் கோவில்பட்டி போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து குழந்தையை மீட்ட கோவில்பட்டி போலீசார் குழந்தையை தந்தையுடன் வீடியோ கால் மூலம் பேச வைத்துள்ளனர். குழந்தையை பார்த்த அஷரப் நிம்மதி பெரு மூச்சு விட்டுள்ளார்.

இதனையடுத்து குழந்தை மும்தாஜ் பேகத்தை கோவில்பட்டியில் இருந்து மீட்டு நாகப்பட்டினத்தில் உள்ள குழந்தைகள் முகாமிற்கு அனுப்பி வைப்பதற்கான நடவடிக்கையை மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர் அஷரப் அலியையும் அவருடைய ஒன்றரை வயது மகன் ராஜ உசைனை, ரெட் கிராஸ் அமைப்பின் உதவியுடன் கார் மூலமாக நாகூருக்கு அனுப்பி வைப்பதற்கான ஏற்பாடுகளையும் செய்துள்ளார். தன்னைச் சந்தித்து குழந்தையை மீட்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்த ஒரு மணி நேரத்தில், காவல்துறை உதவியுடன் குழந்தையை கண்டுபிடித்த மாவட்ட ஆட்சியருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com