குழந்தையை கொன்றுவிட்டு நாடகமாடிய 3 பேர் கைது - விசாரணையில் திடுக்கிடும் தகவல்
விருத்தாசலம் அருகே குழந்தையை அடித்துக் கொன்று புதைத்து விட்டு, மாடியில் இருந்து தவறி விழுந்து விட்டதாக நாடகமாடிய 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடலூர் மாவட்டம் நெய்வேலி அடுத்த மேலகுப்பத்தை சேர்ந்தவர் உத்தண்டி (35). இவரது மனைவி ராஜேஸ்வரி(32). இருவரும் தங்களது 3 மகள்களுடன் அதே பகுதியிலுள்ள கமலம் (59) என்பவர் வீட்டில் தங்கி வேலை செய்து வந்துள்ளனர். சம்பவத்தன்று கமலம் வீட்டு மாடியில் மணிலா காய வைத்ததாகத் தெரிகிறது. ராஜேஸ்வரியின் குழந்தைகள் மணிலாவை மிதித்து விளையாடியதால் அதனை பார்த்து ஆத்திரமடைந்த கமலாவின் குடும்ப நண்பர் ஐயப்பன் (35) என்பவர், ராஜேஸ்வரியின் 2 வது மகள் மீனா (5), மணிலாவை மிதித்து நாசம் செய்வதாக சொல்லி தலைமுடியை பிடித்து மாடி சுவரில் ஓங்கி அடித்துள்ளார். இதில் தலையில் பலத்த அடிபட்ட மீனா சம்பவ இடத்திலேயே இறந்ததாக தெரிகிறது.
இந்நிலையில் கமலம், ஐயப்பன், அருள் முருகன், அஞ்சலை ஆகிய 4 பேரும் சேர்ந்து கொலையை மறைக்க முடிவு செய்து ராஜேஸ்வரி மற்றும் அவரது கணவர் உத்தண்டி ஆகியோரிடம் மீனா மாடியில் இருந்து தவறி விழுந்து விட்டதாக கூறி நாடகமாடினர். மேலும் கமலத்தின் முந்திரி தோப்பு முதனை கிராமத்தில் இருப்பதால் மீனாவின் உடலை முதனை கிராமத்திற்கு கொண்டு சென்று ஒரு முந்திரி மரத்தின் கீழ் புதைத்துவிட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் கமலம் உள்ளிட்ட 4 பேரும் ராஜேஸ்வரியையும், உத்தண்டியையும் வீட்டை விட்டு வெளியே விடாததால் இருவரும் தெரியாமல் வீட்டை விட்டு தப்பித்து இன்று அதிகாலையில் நெய்வேலி தெர்மல் காவல் நிலையம் சென்று புகார் கொடுத்தனர்.
உடன் இன்ஸ்பெக்டர் லதா தலைமையிலான போலீசார் விரைந்து சென்று கமலம், ஐயப்பன், அஞ்சலை ஆகிய மூன்று பேரையும் பிடித்து காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் புகாரை ஒத்துக் கொண்ட மூவரும் மீனாவின் உடலை புதைத்த இடத்தை போலீசாரிடம் காட்டினார்.
அதனைத் தொடர்ந்து புதுச்சேரி பிம்ஸ் மருத்துவ குழுவினர் வர வைக்கப்பட்டு விருத்தாசலம் தாசில்தார் கவியரசு மற்றும் வருவாய் துறையினர், நெய்வேலி துணை போலீஸ் சூப்பிரண்டு லோகநாதன் ஆகியோர் முன்னிலையில் பிரேதத்தை தோண்டி எடுத்து அதே இடத்தில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. மேலும் தலைமறைவாக உள்ள அருள்முருகன் என்பவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். 5 வயது பெண் குழந்தையை அடித்துக் கொன்று புதைத்து விட்டு மாடியில் இருந்து தவறி விழுந்து விட்டதாக நாடகமாடிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.