தமிழகத்தில் முழுமுடக்க காலத்தில் குழந்தைத் திருமணங்கள் 40% வரை அதிகரிப்பு
தமிழகத்தில் முழு முடக்கக் காலத்தின்போது குழந்தை திருமணங்கள் 40 சதவீதம் வரை அதிகரித்திருப்பதாக வெளியாகி இருக்கும் தகவல் அதிர்ச்சியளிக்கிறது.
கடந்த ஆண்டு மே மாதத்தில் மட்டும் தமிழகத்தில் குழந்தை திருமணம் 40 % அதிகரித்திருப்பதாக குழந்தைகளின் நலன் மற்றும் உரிமைகளை அடிப்படையாகக் கொண்டு செயல்பட்டு வரும் தொண்டு நிறுவனமான CRY-யின் புள்ளி விவரங்கள் வாயிலாகத் தெரியவந்துள்ளது.
குறிப்பாக சேலம், தருமபுரி, ராமநாதபுரம் மற்றும் திண்டுக்கல் ஆகிய நான்கு மாவட்டங்களில் குழந்தை திருமணங்கள் வெகுவாக அதிகரித்துள்ளன. இந்த மாவட்டங்களைச் சேர்ந்த பழங்குடியினர் வசிக்கும் 71 பகுதிகளில் குழந்தை திருமணங்கள் அதிக அளவில் நடப்பதாக CRY தெரிவித்திருக்கிறது. 2020ஆம் ஆண்டு மே மாதம் மட்டும் 318 குழந்தை திருமணங்கள் நடைபெற்றதாக CRY தெரிவிக்கிறது.
CRY-ன் புள்ளி விவரங்கள் படி சேலம் மாவட்டத்தில் 2019ஆம் ஆண்டு மே மாதத்தில் 60 குழந்தை திருமணங்கள் நடைபெற்ற நிலையில் 2020ஆம் ஆண்டு மே மாதத்தில் 98 ஆக அதிகரித்துள்ளது. தருமபுரியில் 2019 மே மாதத்தில் 150 குழந்தை திருமணங்கள் நடைபெற்ற நிலையில் அது 2020 மே மாதத்தில் 192 ஆக அதிகரித்துள்ளது.
குழந்தை திருமணத்தை தடுக்கும் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தாவிட்டால் இந்த ஆண்டு குழந்தை திருமணங்கள் இன்னும் அதிகமாக நடைபெறும் வாய்ப்புகள் உள்ளதாக CRY அமைப்பு அச்சம் தெரிவிக்கிறது. பொதுமுடக்கம் மட்டும் அல்லாமல், முகூர்த்த நாட்களும் அதிகமாக இருந்த மே மாதத்தில் அதிக அளவில் குழந்தை திருமணங்கள் நடந்திருக்கும் என கணிக்கப்பட்டிருக்கிறது.
பொதுமுடக்க காலத்தில் திருமணங்களை நடத்துவதற்கு ஆகும் செலவு 10ஆயிரம் முதல் 20ஆயிரம் ரூபாயக மட்டுமே இருப்பதால் பல பெற்றோர்கள் இந்த சூழலை பயன்படுத்தி பிள்ளைகளின் திருமணத்தை முடிக்க திட்டமிடுவதாக சொல்லப்படுகிறது. 2011ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படி தமிழகத்தில் 19 வயதுக்கு கீழ் உள்ள 8.69 சதவீதம் பெண்குழந்தைகள் திருமணம் ஆனவர்கள்.
குறிப்பாக தமிழகத்திலேயே அதிகபட்சமாக தருமபுரியில் 11.9சதவீதமும், சேலத்தில் 10.9 சதவீதமும் 19 வயசுக்கு கீழ் உள்ள பெண் குழந்தைகள் திருமணம் ஆனவர்களாக உள்ளனர். குழந்தை திருமணங்களை தடுக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தாலும், பல திருமணங்கள் குறித்த தகவல்கள் வெளியில் தெரியாமலேயே நடைபெறுவதாக தனியார் தொண்டு நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.