சிறுமியை திருமணம் செய்த இளைஞர் போக்சோவில் கைது
கோவை அருகே 15 வயது சிறுமியை திருமணம் செய்த வாலிபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கோவை பெரியநாயக்கன்பாளையத்தை சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மகன் அஜீத்குமார். இவர் மோட்டார் சைக்கிள் நிறுவனத்தில் விற்பனை பிரதிநிதியாக உள்ளார். இவர் கடந்த 2016ம் ஆண்டு பெரியநாயக்கன்பாளையத்தை சேர்ந்த 15 வயது சிறுமி ஒருவரை காதல் ஆசை வார்த்தை கூறி கடத்திக் சென்றார். போலீசில் புகார் செய்த பெற்றோர் மகளை மீட்டனர். ஆனால் மீண்டும் அஜீத்குமார் அதே சிறுமியை கடத்திச் சென்றார். இதுகுறித்து பெரியநாயக்கன்பாளையம் போலீசார் வழக்குப் பதிவு செய்து அஜீத்குமாரை தேடி வந்தனர்.
இதனிடையே சிறுமியுடன் அஜீத்குமார் குடும்பம் நடத்தி இவர்களுக்கு 5 மாதத்தில் பெண் குழந்தை ஒன்றும் உள்ளது. மேலும் கடந்த சில நாட்களாக அஜீத்குமார் சிறுமியை அடித்து துன்புறுத்தியதாக தெரிகிறது.
இந்நிலையில் சிறுமி குழந்தையுடன் தனது பெற்றோர் வீட்டில் தஞ்சம் அடைந்துள்ளார். இதையடுத்து சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரின் அடிப்படையில், துடியலூர் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மீனாம்பிக்கை வழக்குப்பதிவு செய்து அஜீத்குமாரை போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தார்.