குடிக்க தண்ணீர் கேட்டு குழந்தையை கடத்திய வடமாநில இளைஞர்!
ஆரணி அருகே 3 வயது குழந்தையை கடத்திய வடமாநில இளைஞரை பிடித்து பொதுமக்கள் தர்ம அடி கொடுத்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்த புதிய காலணி பகுதியை சேர்ந்தவர் ஆனந்தன். இவர் தனியார் வங்கி ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். இவர் வசிக்கும் பகுதியில் கடந்த சில நாட்களாக வடமாநிலத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் நோட்டமிட்டு சுற்றியுள்ளார். இந்நிலையில் மூன்று பேருடன் இன்று ஆனந்த வீட்டின் அருகே வந்த அந்நபர், குடிக்க தண்ணீர் கேட்டுள்ளார். வெயில் நேரத்தில் பார்க்க பரிதாபமாக இருப்பதால், தண்ணீர் கொண்டு வந்து கொடுத்துள்ளார் ஆனந்தன்.
அப்போது ஆனந்தனின் 3 வயது குழந்தை அனிஷ் வெளியே விளையாடிக்கொண்டு இருந்துள்ளார். தண்ணீர் கொடுத்த சொம்பை அந்த இளைஞர் திருப்பிக்கொடுக்க, அதை உள்ளே கொண்டு போய் வைத்துள்ளார் ஆனந்தன். அதற்குள் குழந்தையை தூக்கிக்கொண்டு வேகமாக அந்த இளைஞர் நடந்து சென்றுள்ளார். குழந்தையை வாடமாநில இளைஞர் தூக்கிச்செல்வதை, ஆனந்தனின் பக்கத்து வீட்டுப்பெண் கண்ணம்மா கவனித்துள்ளார். அந்த இளைஞரை பார்த்து சத்தம் போட்டுள்ளார். கண்ணம்மாவின் குரளை கேட்ட அந்த இளைஞர் ஓட்டம் பிடித்துள்ளார். அவருடன் வந்திருந்த மூன்று பேரும் அருகில் இருந்த மதுக்கடைக்குள் சென்றுவிட்டனர்.
கண்ணம்மாவின் குரல் கேட்டு அங்கு திரண்ட மக்கள் அந்த இளைஞரை விரட்டிப்பிடித்து, தர்ம அடி கொடுத்தனர். பின்னர் சேத்துப்பட்டு காவல்நிலையத்தில் அந்த இளைஞரை ஒப்படைத்தனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் அந்த நபர் மனநலம் பாதித்தவர் போல் இருப்பது தெரியவந்துள்ளது. அவர் மனநலம் பாதித்தபோல் நடிக்கிறாரா? அவருக்கு பின்னணியில் இருக்கும் கும்பல் எது என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.