\
எஸ்கலேட்டரில் சிக்கி தூக்கி வீசப்பட்ட சிறுவன் உயிரிழப்பு: சென்னையில் சோகம்

எஸ்கலேட்டரில் சிக்கி தூக்கி வீசப்பட்ட சிறுவன் உயிரிழப்பு: சென்னையில் சோகம்

எஸ்கலேட்டரில் சிக்கி தூக்கி வீசப்பட்ட சிறுவன் உயிரிழப்பு: சென்னையில் சோகம்
Published on

சென்னையில் வணிக வளாகத்தின் எஸ்கலேட்டரில் சிக்கி தூக்கி வீசப்பட்ட சிறுவன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தான். இதுதொடர்பாக வணிகவளாகத்தின் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.

சென்னை கொருக்குப்பேட்டையைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் சனில்குமாரின் மகன் நவீன் கண்ணா. கடந்த 10-ம் தேதி தனது சகோதரியுடன் சென்னை ராயப்பேட்டையில் உள்ள வணிக வளாகம் ஒன்றுக்கு சென்றான் நவீன். தனது பையை தோளில் மாட்டியபடி வேடிக்கை பார்த்துக் கொண்டே தரைத்தளத்தில் இருந்து மேலே சென்ற நவீனுக்கு அங்கு ஆபத்து காத்திருந்தது தெரியவில்லை. முதல் தளத்தில் இருந்து இரண்டாவது தளத்துக்கு செல்வதற்காக எஸ்கலேட்டர் அருகே வந்தான் நவீன். அப்போது அவன் தோளில் மாட்டியிருந்த பை எஸ்கலேட்டரின் கைபிடியில் சிக்கியது. பையோடு சேர்த்து நவீனை இழுத்த எஸ்கலேட்டர், சிறுவனை தரைத்தளத்தில் தூக்கி வீசியது. பொம்மை போல் மேலிருந்து கீழே விழுந்த சிறுவனை கண்டு வணிகவளாகத்தில் இருந்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். பலத்த காயத்துடன் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நவீன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தான்.

இதனிடையே, நவீனைப்போல் வேறு யாரும் உயிரிழக்காமல் இருக்க உரிய நடவடிக்கைகளை வணிக வளாகம் மேற்கொள்ள வேண்டும் என்று உறவினர்கள் வலியுறுத்தி உள்ளனர். நவீன் உயிரிழந்தது குறித்து சென்னை அண்ணாசாலை காவல்நிலையத்தில் சனில்குமார் புகார் அளித்துள்ளார். அதன்பேரில் கவனக்குறைவால் மரணத்தை விளைவித்ததாக வணிகவளாகம் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com