மேகதாது அணை விவகாரம் : மத்திய அமைச்சர்களுக்கு முதல்வர் கடிதம்
காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட கர்நாடகாவுக்கு அனுமதி தரக்கூடாது என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரண்டு மத்திய அமைச்சர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
மேகதாதுவில் அணை கட்ட அனுமதிக்க வலியுறுத்தி கர்நாடகா மீண்டும் முன்வைத்துள்ள கோரிக்கையை நிராகரிக்க வலியுறுத்தி மத்திய ஜல்சக்தித்துறை அமைச்சர் கஜேந்திரசிங் ஷெகாவத் மற்றும் மத்திய சுற்றுச்சூழல்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் ஆகிய இருவருக்கும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.
தமிழ்நாட்டின் ஒப்புதல் இல்லாமல் மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடகாவிற்கு மத்திய அரசு எவ்வித அனுமதியும் வழங்கக்கூடாது என வலியுறுத்தப்பட்டுள்ளது. காவிரி படுகையில் ஏற்கனவே உள்ள அணைகளே போதுமானது என்றும் அவற்றில், தண்ணீரை சேமித்து வைத்து தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களுக்கு தண்ணீர் வழங்க முடியும் எனவும் காவிரி தீர்ப்பாயம் மற்றும் உச்சநீதிமன்றமும் தெரிவித்திருப்பதை சுட்டிகாட்டியுள்ளார்.
மேகதாதுவில் கர்நாடகா அணை கட்டுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்கள் இந்தத் திட்டத்தை ஏற்றுக்கொள்ளவில்லை எனவும் அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். கடந்த ஜூலை மாதம் 19ஆம் தேதி நடைபெற்ற நிபுணர்கள் குழு கூட்டத்தில், மேகதாது அணை திட்டத்தை ஒத்திவைத்திருப்பதையும் கடிதத்தில் முதலமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேகதாது திட்டத்திற்கு அனுமதி கோரி மத்திய அரசை கர்நாடகா மீண்டும் அணுகியிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருப்பதாகவும், இருமாநிலங்களுக்கு இடையே பாயும் ஆற்றில் புதிதாக அணை கட்ட தமிழ்நாடு கடுமையாக ஆட்சேபனையை வலியுறுத்துவதாகவும் கடித்தத்தில் முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார். எனவே, கர்நாடக அரசின் கோரிக்கையை மத்திய அரசின் நிபுணர் குழு நிராகரிக்கவேண்டும் என்று அறிவுறுத்த கடிதத்தில் முதலமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளார்.