மூத்த கம்யூனிஸ்ட் தலைவர் நல்லகண்ணு நூற்றாண்டு விழா: முதல்வர் ஸ்டாலின் நேரில் வாழ்த்து
சுதந்திர போராட்ட வீரரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான நல்லகண்ணுவின் நூற்றாண்டு விழா இன்று தமிழ்நாடு எங்கும் கொண்டாடப்பட்டு வருகிறது.
கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுவின் பிறந்தநாளை ஒட்டி, தமிழகம் முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வரும் நிலையில் சென்னை தலைமை அலுவலகத்தில் நல்லகண்ணுவின் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நல்லகண்ணுவை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். உடன் கூட்டணி கட்சி தலைவர்களான மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் கட்சி செயலாளர் கே.பாலகிருஷ்ணன், ஜி.ராமகிருஷ்ணன் மற்றும் விசிக தலைவர் திருமாவளவன், தமிழக அமைச்சர்கள் கே.என்.நேரு, பொன்முடி, மனிதநேய மக்கள் கட்சி அப்துல் சயிது உள்ளிட்ட கூட்டணி கட்சி மற்றும், சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசும்போது, “மூத்த தலைவர் நல்லகண்ணு பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் அவரை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்து வருகிறேன். இந்தமுறை அவருக்கு, நூற்றாண்டு கொண்டாட்டம் கொண்டாடுவது போல் வேறு யாருக்கும் அமையாது.
இந்த மேடையில் நான் அவரை வாழ்த்த வரவில்லை. அவரிடம் வாழ்த்து பெறவே வந்திருக்கிறேன். திமுக-வின் திராவிட மாடல் ஆட்சியின் பல்வேறு திட்டத்திற்கு துணையாக இருப்பவர் நல்லகண்ணு. எப்போதும் சிந்தித்து அவரின் செயல்களை வெளிப்படுத்துபவர் அவர். இன்னும் தொடர்ந்து எங்களுக்கு வழிகாட்ட வேண்டும்.
வரும் சட்டமன்ற தேர்தலில் 200 இடங்கள் அல்ல... அதையும் தாண்டி இந்த கூட்டணி வெற்றி பெறும். திமுக தலைமையில் இருக்கும் கூட்டணி ஏழு ஆண்டுகளுக்கு மேல் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. இது கொள்கை கூட்டணி மட்டுமில்லாமல் நிரந்தர கூட்டணியாக நாங்கள் கருதுகிறோம்” என்றுக் கூறினார்.
இந்நிகழ்வு தொடர்பாக தன் எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், “போராட்டம் - தொண்டு - பொதுநலன், இதுவே தோழர் நல்லகண்ணு அய்யா அவர்களின் நூறாண்டுகால வாழ்க்கைப் பக்கங்களில் நிறைந்திருக்கும் சரிதம்! எளிமையான வாழ்வுக்குச் சொந்தக்காரர் என்று சொல்வதைவிட, பொதுவுடைமைக் கருத்தியலுக்காகக் கடுமையான வாழ்வை எதிர்கொண்ட தீரர் அவர்!
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நூற்றாண்டு காணும் வேளையில், செங்குருதி சிந்திப் பாடுபட்ட தோழர் நல்லகண்ணு அய்யா அவர்களும் நூற்றாண்டு காண்கிறார்! இயக்கமே உயிர்மூச்சென வாழும் அவரைப் போற்றுவோம்! தகைசால் தமிழரே, தமிழ்நாடே தங்களை வாழ்த்துகிறது! தங்களது வழிகாட்டுதலில் சமத்துவத்தை நோக்கிய பயணத்தில் முன்செல்கிறோம்!” என்றுள்ளார்.
இதற்கிடையே, நல்லகண்ணுவின் 100வது பிறந்தநாளை முன்னிட்டு துாத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனையை தரம் உயர்த்தி நல்லகண்ணுவின் பெயர் சூட்டப்படும் என தமிழக முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டு உள்ளார்.
இதுதொடர்பான அறிக்கையில், “85 ஆண்டுகளுக்கும் மேலாக மக்கள் பணியையே எப்போதும் தனது தலையாயக் கடமையாசுக் கொண்டு செயல்பட்டு வரும் நன்னலமற்ற தகைசால் தமிழர் தோழர் இரா. நல்லகண்ணு அய்யா அவர்களின் பெருமையைப் போற்றும்வகையில், திருவைகுண்டத்தில் அமையவிருக்கும் புதிய மருத்துவமனைக் கட்டடத்திற்கு ‘தோழர் நல்லகண்ணு நூற்றாண்டுக் கட்டடம்’ எனப் பெயரிடவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்கள்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.