சேலத்தில் இன்று பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு வருகை தரும் முதல்வர் ஸ்டாலின்

சேலத்தில் இன்று பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு வருகை தரும் முதல்வர் ஸ்டாலின்
சேலத்தில் இன்று பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு வருகை தரும் முதல்வர் ஸ்டாலின்

'வருமுன் காப்போம் திட்டம்' உள்ளிட்ட பல்வேறு அரசு நலத்திட்டங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் சேலத்தில் இன்று தொடங்கி வைக்கிறார்.

பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின், காலை 9 மணியளவில் தனி விமானம் மூலம் சேலம் சென்றடைகிறார். அங்கு கட்சி நிர்வாகிகள் உள்ளிட்டோர் உற்சாக வரவேற்பு அளிக்க உள்ளனர். அங்கிருந்து வாழப்பாடி செல்லும் முதல்வர் மு.க.ஸ்டாலின், அங்குள்ள அரசு பள்ளியில் நடக்கும் விழாவில் கலந்து கொண்டு, 'வருமுன் காப்போம்' திட்ட மருத்துவ முகாமை தொடங்கி வைக்கிறார்.

அதனைத் தொடர்ந்து, ஆத்தூரில் போக்குவரத்துத் துறையின் சார்பில் கட்டப்பட்டுள்ள வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தை திறந்து வைக்கிறார். பின்னர் வட்டார போக்குவரத்து அலுவலக வளாகத்தில், உழவர் நலத்துறை, மக்கள் நல்வாழ்வுத்துறை, வருவாய்த்துறை, பள்ளிக்கல்வித்துறை உள்ளிட்ட துறைகளின் சார்பில் 28 கோடியே 99 லட்சம் மதிப்பில் 28 முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைக்கிறார்.

இதையடுத்து பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, போக்குவரத்துத்துறை, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை போன்ற துறைகளில் 23 கோடியே 28லட்சம் ரூபாய் மதிப்பில் 13 புதிய திட்டங்களுக்கு முதல்வர் அடிக்கல் நாட்டுகிறார். ஆத்தூரில் உள்ள தனியார் தொழில் நிறுவனத்தில் ஜவ்வரிசி மற்றும் ஸ்டார்ச் உற்பத்தியை பார்வையிடும் முதல்வர் மு.க.ஸ்டாலின், மரவள்ளி விவசாயிகள், ஜவ்வரிசி உற்பத்தி நிறுவன பிரநிதிகளுடன் கலந்துரையாடுகிறார்.

இதைத் தொடர்ந்து மாலை 4மணியளவில், கருப்பூர் சிட்கோ மகளிர் தொழிற்பூங்காவில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவன பிரதிநிதிகளுடன் கலந்துரையாடுகிறார். அதனைத் தொடர்ந்து, வியாழக்கிழமை தருமபுரிக்கு செல்லும் முதல்வர் மு.க.ஸ்டாலின், அங்கும் பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைக்கிறார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com