`அச்சிடப்பட்ட உரை மட்டுமே அவைக்குறிப்பில் ஏறவேண்டும்’- சட்டப்பேரவையில் முதலமைச்சர் உறுதி

`அச்சிடப்பட்ட உரை மட்டுமே அவைக்குறிப்பில் ஏறவேண்டும்’- சட்டப்பேரவையில் முதலமைச்சர் உறுதி
`அச்சிடப்பட்ட உரை மட்டுமே அவைக்குறிப்பில் ஏறவேண்டும்’- சட்டப்பேரவையில் முதலமைச்சர் உறுதி

அச்சிடப்பட்டதற்கு மாறாக ஆளுநர் பேசியவை எதுவும் அவைக்குறிப்பில் அச்சிடப்படாது என தமிழ்நாடு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

சமீபத்தில் `தமிழ்நாடு என்பதை விட தமிழகம் என்பதே சரி’ என தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில்தான் இன்று சட்டப்பேரவையில் ஆளுநர் ஆர்.என்.ரவி உரையாற்றினார். அவர் உரையை தொடங்கியதும் திமுக கூட்டணி கட்சிகளை சேர்ந்த எம்எல்ஏக்கள் அவருக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பினர். இதனால், அவையில் குழப்பம் ஏற்பட்டது. எனினும், ஆளுநர் தனது உரையை தொடர்ந்து வாசிக்கத் தொடங்கினார்.

அதே நேரம் காங்கிரஸ், மதிமுக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் `தமிழ்நாடு... தமிழ்நாடு...’ என முழக்கமிட்டவாரே வெளிநடப்பு செய்தன. இந்நிலையில் அரசு தயாரித்த உரையை முழுமையாக படிக்காமல் சில வார்த்தைகளை ஆளுநர் தவிர்த்ததாக திமுக கூட்டணிக்கட்சிகள் குற்றச்சாட்டு முன்வைத்தன. குறிப்பாக, `ஆளுநர் தமிழ்நாடு, திராவிட மாடல் ஆகிய வார்த்தைகளை குறிப்பிட்டு தவிர்த்துவிட்டார்’ என திமுக கூட்டணி கட்சிகள் குற்றச்சாட்டு வைத்துள்ளனர். `அரசு தயாரித்த உரையை அப்படியே வாசிப்பதுதான் மரபு என்று கூறி, மரபை மீறி ஆளுநர் செயல்பட்டுள்ளார்’ எனவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு என்பதை தவிர்க்க TAMILNADU GOVERNMENT என்பதை THIS GOVERNMENT என மாற்றி படித்துள்ளார் ஆளுநர். மேலும் குறிப்பிட்ட ஒரு வரியை முழுமையாக அவர் தவிர்த்திருக்கிறார். அந்த வரியில், “சமூகநீதி, சுயமரியாதை, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி, சமத்துவம், பெண்ணுரிமை, மதநல்லிணக்கம், பல்லுயிர் ஓம்புதல் ஆகிய கொள்கைகள் இவ்வரசின் அடித்தளமாக அமைந்துள்ளன. தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர், பெருந்தலைவர் காமராசர், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் போன்ற மாபெரும் தலைவர்களின் கொள்கைகளையும் கோட்பாடுகளையும் பின்பற்றி பார்போற்றும் திராவிட மாடல் ஆட்சியை இந்த அரசு வழங்கி வருகின்றது” என்று இருந்தது.

இக்குற்றச்சாட்டுகளை தொடர்ந்து, முதலமைச்சர் ஸ்டாலின் சட்டப்பேரவையில் “தமிழ்நாடு அரசால் தயாரித்து அச்சிடப்பட்ட உரையை ஆளுநர் முறையாக படிக்கவில்லை. ஆளுநர் உரை தொடங்குவதற்கு முன் எங்கள் எதிர்ப்பு எதையும் நாங்கள் பதிவு செய்யவில்லை. ஆளுநருக்கு முழு மரியாதை அளித்து, நாங்கள் கண்ணியத்துடன் நடந்து கொண்டோம். எங்கள் கொள்கைக்கு மாறாக மட்டுமல்ல; அரசின் கொள்கைக்கு மாறாகவும் ஆளுநர் நடந்துகொண்டார். அரசு தயாரித்த, அச்சிடப்பட்ட உரையை ஆளுநர் முறையாக படிக்காதது வருந்தத்தக்கது. அச்சிடப்பட்ட தமிழ் மற்றும் ஆங்கில உரைகள் மட்டுமே அவைக்குறிப்பில் ஏற வேண்டும்” என்றார்.

தொடர்ந்து, அச்சிடப்பட்டதற்கு மாறாக ஆளுநர் பேசியவை எதுவும் அவைக்குறிப்பில் ஏறாது என பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com