மூத்த கவிஞர் ஈரோடு தமிழன்பன் மறைவு.. முதல்வர் ஸ்டாலின் நேரில் அஞ்சலி!
மரபுக்கவிதை மற்றும் புதுக்கவிதை எழுதிய ஈரோடு தமிழன்பன் மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார். சாகித்திய அகாடமி விருது பெற்ற இவர், பாவேந்தர் பாரதிதாசனுடன் பத்தாண்டுகள் நெருங்கிப் பழகியவர். அரசியல் தலைவர்களும், திரைத்துறையினரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
மரபுக்கவிதை மற்றும் புதுக்கவிதை எழுதுவதில் சிறந்தவரான ஈரோடு தமிழன்பன் 'வணக்கம் வள்ளுவ' என்ற நூலுக்காக 2004ஆம் ஆண்டு சாகித்திய அகாடமி விருது பெற்றார்.
சிறுகதைகள், புதினங்கள், நாடகங்கள் மற்றும் குழந்தை இலக்கியம் உள்ளிட்ட பல்வேறு படைப்புகளை எழுதிய இவர், தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருது உள்ளிட்ட பல உயரிய விருதுகளையும் பெற்றுள்ளார்.
இவர் கவிஞராக மட்டுமல்லாமல் செய்திவாசிப்பாளராகவும், அரிமா நோக்கு என்ற ஆய்விதழின் ஆசிரியராகவும் பணியாற்றினார். அதனுடன் பாவேந்தர் பாரதிதாசன் அவர்களுடன் பத்தாண்டுகள் நெருங்கிப் பழகிய சிறப்புக்குரியவர் ஈரோடு தமிழன்பன்.
இவரது மறைவுக்கு அரசியல் தலைவர்களும், திரைத்துறையினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
முதல்வர் நேரில் அஞ்சலி!
சாகித்திய அகாடமி விருது வென்ற கவிஞர் ஈரோடு தமிழன்பன் மறைவுக்கு அறிக்கை வெளியிட்டிருந்த முதல்வர் ஸ்டாலின், நேராக சென்று அஞ்சலி செலுத்தினார்..
அவருடைய அறிக்கையில், “ மரபுக்கவிதை, புதுக்கவிதை என இரண்டிலும் சிறந்து, தமிழுக்கு வளம் சேர்த்த அறிஞர் ஈரோடு தமிழன்பன் என்கிற செந்தீசன் மறைந்த செய்தியறிந்து மிகவும் வருந்தினேன்.
பாவேந்தர் பாரதிதாசன் அவர்களுடன் பத்தாண்டுகள் நெருங்கிப் பழகிய சிறப்புக்குரியவர் ஈரோடு தமிழன்பன். சென்னை தொலைக்காட்சி நிலையத்தில் செய்தி வாசிப்பாளர், பேராசிரியர், தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் நிர்வாகக் குழு உறுப்பினர், அறிவியல் தமிழ் மன்ற உறுப்பினர், அரிமா நோக்கு இதழின் ஆசிரியர் எனப் பொறுப்புகளில் அவர் ஆற்றிய பணிகளும் எழுதிய நுங்களும் ஏராளம்.
தமது இடையறாத தமிழ்ப் பணிகளுக்கு அங்கீகாரமாகக் கலைமாமணி சாகித்ய அகாதெமி, பாரதிதாசன் விருது, சிறந்த நூலுக்கான தமிழ்நாடு அரசின் விருது, குறள்பீட விருது, முரசொலி அறக்கட்டளையின் கலைஞர் விருது, கவிக்கோ விருது என எண்ணற்ற விருதுகளைப் பெற்று அவற்றுக்குப் பெருமை சேர்த்திருக்கிறார் கவிஞர் ஈரோடு தமிழன்பன் அவர்கள்.
நமது திராவிட மாடல் ஆட்சிக்கு வந்ததும் 2022-ம் ஆண்டு முத்தமிழறிஞரின் பிறந்ததாளில் கனவு இல்லம் திட்டம் திட்டத்தின்கீழ், அவருக்கு அடுக்குமாடிக் குடியிருப்பில் வீடு வழங்கியிருந்தோம்.
மேலும், அவர் இயற்றிய கீழடியில் கேட்ட தாலாட்டுகள், நெருக்கடி நேரத்தில் கலைஞரோடு (கவிதைகளும் கட்டுரைகளும்) ஆகிய நூல்களையும், வட அமெரிக்க ஈரோடு தமிழன்பன் வாசகர் பேரவை தயாரித்துள்ள, ஈரோடு தமிழன்பன் அவர்களின் வாழ்க்கை வரலாறு குறித்த "மகாகவி" என்ற ஆவணப் படத்தையும் முதலமைச்சராக வெளியிடும் பேற்றினைப் பெற்றிருந்ததை இவ்வேளையில் நினைவுகூர்கிறேன்.
இறுதிக்காலம் வரையிலும் பல வகைமைகளிலும் தமிழுக்குத் தொண்டாற்றிய நீண்ட நெடிய பெருவாழ்வுக்குச் சொந்தக்காரரான கவிஞர் ஈரோடு தமிழன்பனை இழந்து வாடும் அவர்தம் குடும்பத்தினருக்கும். தமிழன்பர்களுக்கும் எனது ஆழந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என கூறியிருந்தார்.

