
சென்னை விமான நிலையத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,
“தமிழகத்து மண், மகத்துவம் வாய்ந்த மண். பாரத தேசத்தின் ஆன்மா இருக்கக்கூடிய மண். அதனால் தான் பிரதமர் கலாச்சார அடிப்படையில் பெருமையை தேடிக்கொண்டு இருக்கிறார்.
பாஜக வருங்காலத்தில் தமிழகத்தில் இருந்தும் ஒரு பாரத பிரதமரை உருவாக்குவதற்கு பாடுபடும் என்பது தான் அமித்ஷா கூறியதன் அர்த்தம். தமிழகத்தின் மகத்துவத்தை உணர்த்துவதற்காக இதை கூறினார். தென் சென்னை பாராளுமன்ற நிர்வாகிகள் கூட்டம் மற்றும் வேலூர் பொதுக் கூட்டம் இரண்டுமே மிக முக்கியமானவை.
9 ஆண்டுகால பிரதமர் மோடி ஆட்சியில் தமிழக மக்களுக்கு பெருமை கிடைத்துள்ளது. தமிழக மக்களை மையப்படுத்தி தான் 9 ஆண்டுகால மோடி ஆட்சி இருந்தது. இதை கை நீட்டி கூட தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றம் சுமத்த முடியாது. நமது பாரத பிரதமர் நரேந்திர மோடியை கை நீட்டி பேசுவதற்கு கூட தமிழக முதலமைச்சர் ஸ்டாலினுக்கு வாய்ப்பில்லை, அப்படி அவரது செயல்பாடு உள்ளது!
எய்ம்ஸ் மருத்துவமனை வரும் 2024 ஆம் ஆண்டு மார்ச் மாதம் திறக்கப்பட உள்ளது. மாணவர் சேர்க்கை தொடங்கிவிட்டது. பிரிவு 1 மற்றும் 2 முடிவடைந்துள்ளது. 18 ஆண்டுகளாக மத்திய அரசில் ஒரு பங்காய் திமுக அரசு இருந்தது. ஆனால், டெல்லியை விட்டு எய்ம்ஸ் மருத்துவமனையை தமிழகத்துக்கு கொண்டு வர வேண்டும் என ஒரு கனவு கூட அவர்களுக்கு இல்லை.
பல கலாச்சாரங்களைக் கொண்டு அனைத்திலும் முன்னோடியாக இருக்கக்கூடிய ஒரு மாநிலம் தமிழ்நாடு. இங்கிருந்து பிரதமர் வேட்பாளர் ஏன் செல்லவில்லை என்பது ஒரு ஆதங்கத்துக்குரிய கேள்வி. இது தொடர்பாக பல காலமாக கருத்துகள் பரிமாறப்பட்டு வருகின்றது. அனைவருக்கும் தெரிந்த கேள்வியை தான் மக்கள் மன்றத்தில் அமித்ஷா பதிவு செய்துள்ளார்.
ஒரு குறுகிய வட்டத்துக்குள் அரசியல் செய்யும் திமுக அரசு, தமிழ் மொழியை தமிழகத்தை விட்டு வேறெங்கும் கொண்டு செல்ல அனுமதிக்கவில்லை. தமிழ் மொழியின் அழகை உலகம் முழுவதும் கொண்டு செல்ல வேண்டும். அதை தான் பிரதமர் நரேந்திர மோடி செய்கிறார். ஆனாலும் அதை குற்றம் சாட்டுகின்றனர். தமிழகத்தில் பிரதமர் நரேந்திர மோடி போட்டியிட வேண்டும் என ஒரு காரியகர்த்தா கூறியிருக்கிறார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பயம் வந்துவிட்டது. அடுத்த தேர்தல் காலம் அருகில் நெருங்கும் இந்த தருவாயில், முதலமைச்சர் தான் சொன்ன எந்த திட்டத்தையும் (தேர்தல் வாக்குறுதிகள்) நிறைவேற்றவில்லை. அகில இந்திய அரசியலில் திமுகவை யாரும் ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளவில்லை. குறிப்பாக கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவின் பதவியேற்பு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அவமானம் தான் ஏற்பட்டது.
அகில இந்திய அரசியலில் தான் எடுத்த அனைத்து முயற்சிகளும் தோல்வி அடைந்துள்ளதால் முதலமைச்சர் முக.ஸ்டாலின் அச்சம் கொள்கிறார். திருமாவளவன், ஆளும் கட்சியுடன் கூட்டணியில் இருந்து கொண்டு எதிர்க்கட்சியினரை அழைத்து போராட்டத்தில் ஈடுபட தயாராக இருப்பதாக அறிக்கை வெளியிட்டுள்ளார். இதைப்போன்று இந்தியாவில் யாரும் செய்து நான் பார்த்ததில்லை.
இந்த அறிக்கை தொடர்பாக முதலமைச்சரும் ஏதும் பேசவில்லை, அவர்கள் கூட்டணி கட்சிகளுடன் பல குழப்பங்கள் உள்ளது. முதலமைச்சர், தான் பதில் சொல்ல விரும்பாத கேள்விகளுக்கெல்லாம் பதில் சொல்ல மாட்டார். இதை நல்ல விஷயம் என அவர் நினைத்துக் கொண்டிருக்கிறார். ஜப்பான் நாட்டுக்குச் சென்று வந்தபோது 8000 கோடி ரூபாய்க்கு கீழ் தான் கணக்கு காட்டிள்ளார். ஆனால், உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி, தமிழகத்தில் பத்தாயிரம் கோடிக்கு வியாபார ஒப்பந்தம் செய்துள்ளார்.
ஜப்பானில் ஒப்பந்தம் செய்யப்பட்ட நிறுவனங்கள் சிறப்பாக தமிழகத்துக்கு வந்து வியாபாரம் செய்யப் போவதில்லை. மத்திய அரசின் திட்டங்களின் மூலமாக தான் தமிழகத்தில் வியாபாரம் செய்கின்றனர். 2024 ஆம் ஆண்டு மத்திய அரசு நடத்தும் ஜிஐஎம் கூட்டத்தில் கிடைக்கவிருக்கும் சலுகைகள் காரணமாக தான் ஜப்பான் நிறுவனங்கள் ஒப்பந்தத்துக்கு சம்மதித்தனர்.
எழுப்பப்படும் எந்த கேள்விக்கும் பதில் சொல்லாமல் இருந்தால் தமிழகத்தில் ஒரு ஆரோக்கியமான அரசியலை எப்படி நடத்த முடியும்? தமிழகத்தில் பாஜக கட்சியை ஒரு குறியீடுடன் வளர்த்து வருகின்றோம். தலைமையில் பல திறன் பெற்ற தலைவர்கள் உள்ளனர். ஆகையினால் எங்களுக்கு கூட்டணி தொடர்பாக எந்த குழப்பமும் இல்லை.
தமிழகத்தில் தற்போது இருக்கும் சூழ்நிலையில் பாஜக 39 மாவட்டங்களிலும் ஜெயிக்கும். காரணம் திமுக அரசு மக்களிடம் ஏற்படுத்திய அதிருப்தி அலை. இதனால் ஓட்டு வங்கி மூன்று பாகங்களாக பிரியுமா அல்லது இரண்டு பாகங்களாக பிரியுமா என்பது தான் கேள்வி.
தமிழகத்தில் அதிமுக ஒரு பெரிய கட்சி. அதில் எந்த மாற்றுக் கருத்துகளும் இல்லை. ஒரு கூட்டணி அமைகிறது என்ற சூழ்நிலையில் அதற்கு தகுந்த இடத்தில் நடந்து கொள்வோம். அதே தருணத்தில் பாஜக தமிழகத்தில் வளர்ந்து விட்டது. பாஜக கட்சியும் அதே இடத்தில் நிற்க வேண்டும் என பாஜகவின் தொண்டர்கள் மனதில் இருக்கின்றது. கூட்டணியை பற்றி பேசுவதற்கான நேரம் இது இல்லை.
நேற்று உள்துறை அமைச்சர் வருகையின் போது மின்சாரம் துண்டித்தது தொடர்பாக அரசே அறிக்கை வெளியிட்டுள்ளது. ஆனாலும் தமிழக அரசின் அலட்சியமே இதன் மூலமாக எங்களுக்கு தெரிகிறது. நான் யார் மீதும் குறை சொல்லவில்லை. தமிழக அதிகாரிகள் மிகத் திறமையானவர்கள். தமிழக அரசின் அலட்சியத்தின் காரணத்தால் தான் மின்சார துண்டிப்பு நடைபெற்றது.
தமிழகத்தில் இதுவரை இது போன்று நடந்ததில்லை. தமிழக அரசை குறை சொல்வதா குற்றம் சொல்வதா என எனக்குத் தெரியவில்லை” எனக் கூறினார்.