அதியமான்கோட்டை காவல் நிலையத்தில் தீடீரென ஆய்வு மேற்கொண்ட முதல்வர் ஸ்டாலின்
சேலத்தைத் தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக தருமபுரி மாவட்டத்துக்குச் சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின், வழியில் அதியமான் கோட்டை காவல் நிலையத்தில் திடீர் ஆய்வு நடத்தினார்.
சேலம் மாவட்டத்தில் சுற்றுப்பயணத்தை முடித்த முதல்வர் மு.க.ஸ்டாலின், நலத்திட்டங்கள் வழங்குவது உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக தருமபுரிக்கு புறப்பட்டார். சாலைமார்க்கமாக சென்ற முதல்வர், வழியில் திடீரென அதியமான்கோட்டை காவல் நிலையத்திற்குச் சென்றார். அங்கு முன்னாள் முதல்வர் கருணாநிதி 1988 ஆம் ஆண்டு அடிக்கல் நாட்டியதாக இடம்பெற்றிருந்த கல்வெட்டை நெகிழ்ச்சியுடன் பார்த்தார்.
பின்னர் காவல் நிலையத்தில் கோப்புகளை பார்வையிட்ட மு.க.ஸ்டாலின், அங்கு பணியாற்றும் காவலர்கள் குறித்த விவரங்களை கேட்டறிந்தார். 'உங்கள் தொகுதியில் முதலமைச்சர்' திட்டத்தின் கீழ் வரும் புகார்கள், அதிக அளவில் நிலப்பிரச்னை குறித்தே இருந்ததாக காவல் நிலைய ஆய்வாளர் முதல்வரிடம் சுட்டிக்காட்டினார். அந்த புகார்களை வருவாய்த் துறையின் மூலம் தீர்த்து வைத்த விவரங்களை மு.க.ஸ்டாலினிடம் காண்பித்தார்.
இதையடுத்து அங்கிருந்த பெண் காவலர்களிடம் குறைகளை கேட்டறிந்தார். காவல் நிலையத்திலிருந்து புறப்பட்டபோது, காவலர் குடியிருப்பில் உள்ள சிறுவர்களிடம் முதலமைச்சர் நலம் விசாரித்தார். அப்போது அவர்கள் கோரியபடி காவலர் குடியிருப்பில் பூங்கா அமைத்து தருவதாக மு.க.ஸ்டாலின் உறுதியளித்தார்.