முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் என். நன்மாறன் மறைவு - முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் என். நன்மாறன் மறைவு - முதல்வர் ஸ்டாலின் இரங்கல்
முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் என். நன்மாறன் மறைவு - முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

மதுரை முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் என்.நன்மாறன் நேற்று இரவு மூச்சுத்திணறல் காரணமாக அரசு ராஜாஜி மருந்துவமனையில்

தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று மாலை 4 மணிக்கு காலமானார். அவருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.

முதல்வர் தனது ட்விட்டர் பக்கத்தில், ''எளிமைப் பண்பாலும் அயராத உழைப்பாலும் அனைத்துத் தரப்பினரின் நன்மதிப்பையும் பெற்றவர்; இலக்கிய நயத்தால் ‘மேடைக் கலைவாணர்’ எனப் பெயர்பெற்ற மதுரையின் மாணிக்கம்; என் இனிய நண்பர் நன்மாறன் அவர்களின் மறைவு அதிர்ச்சியளிக்கிறது. அவரை இழந்து தவிக்கும் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்'' என்று பதிவிட்டுள்ளார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கட்சியின் சார்பாக இரங்கல் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், '’மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினருமான தோழர் என்.நன்மாறன் அவர்கள் உடல் நலக்குறைவால் மதுரை, அரசு இராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி இன்று (28.10.2021) மாலை 4 மணியளவில் காலமானார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம். அவருக்கு வயது 74. அவருடைய மறைவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

இளம்வயதிலேயே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்த தோழர் என். நன்மாறன் கடைசிவரை கட்சியின் முழுநேர ஊழியராக பணியாற்றினார். கட்சியின் மதுரை மாவட்ட செயற்குழு உறுப்பினராகவும், மாவட்டக்குழு உறுப்பினராகவும் செயல்பட்ட அவர் நீண்டகாலம் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினராக செயல்பட்டார். இரண்டு முறை தமிழக சட்டப்பேரவைக்கு மதுரை கிழக்கு தொகுதியிலிருந்து தேர்வு செய்யப்பட்டு திறம்பட பணியாற்றியவர்.

தமிழகத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தை உருவாக்கிய தலைவர்களில் ஒருவரான தோழர் என்.நன்மாறன் அந்த அமைப்பின் மாநிலத் தலைவராகவும் அகில இந்திய துணைத் தலைவராகவும் பணியாற்றியவர். தமிழகத்தில் கிராமம் கிராமமாகச் சென்று பல்லாயிரக்கணக்கான இளைஞர்களை வாலிபர் சங்கத்தில் இணைத்தவர்.

மேடைக் கலைவாணர் என்று தமிழக மக்களால் அழைக்கப்பட்ட அவர் தன்னுடைய எளிமையான, நகைச்சுவை மிகுந்த உரையினால் மார்க்சியக் கருத்துக்களையும் கட்சியின் கொள்கைகளையும் எளிய மக்களுக்கும் கொண்டு சேர்த்தவர். தன்னுடைய அற்புதமானப் பேச்சுக் கலையால் பல்லாயிரக்கணக்கான மக்களை ஈர்க்கும் ஆற்றல் வாய்ந்தவர். எளிய வாழ்க்கை முறையால் ஒரு சிறந்த கம்யூனிஸ்ட்டாக விளங்கியவர். கட்சிக்கு பொதுமக்கள் மத்தியில் மிகப்பெரிய மரியாதையையும் செல்வாக்கையும் ஏற்படுத்திக் கொடுத்தவர்.

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் - கலைஞர்கள் சங்கத்தின் மாநிலத் துணைத் தலைவராகவும் பணியாற்றி வந்த தோழர் நன்மாறன், ஏராளமான நூல்களையும் எழுதியுள்ளார். அவருடைய மறைவு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் மனைவி மற்றும் இரு மகன்களுக்கும், கட்சித் தோழர்களுக்கும் மாநில செயற்குழு சார்பில் ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறோம்’’ என்று குறிப்பிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com