கட்டட விபத்தில் இறந்த மாணவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம்: முதல்வர்

கட்டட விபத்தில் இறந்த மாணவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம்: முதல்வர்
கட்டட விபத்தில் இறந்த மாணவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம்: முதல்வர்

கடலூரில் பயன்படுத்தப்படாத கட்டடம் தரைமட்டமாகி ஏற்பட்ட விபத்தில் 12-ம் வகுப்பு மாணவர்கள் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். இவர்களின்றி ஒரு மாணவர் படுகாயம் அடைந்துள்ளார். விபத்தில் இறந்தவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ. 2 லட்சம் நிவாரண உதவி வழங்கவுள்ளதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

கடலூர் அருகே வடக்கு ராமாபுரத்தில் கடந்த 2013-ஆம் ஆண்டு தன்னார்வ அமைப்பு மூலம் இலங்கை அகதிகளுக்கான குடியிருப்புகள் கட்டப்பட்டது. அந்தக் குடியிருப்புகள் தரமற்ற முறையில் இருப்பதாகவும், நகரப் பகுதியில் இருந்து வெகு தொலைவில் அது இருப்பதாகவும் கூறி அங்கு செல்ல இலங்கை அகதிகள் மறுத்துவிட்டனர். இதனால் அது பயன்படுத்தப்படாமல் புதர் மண்டி கிடந்தது.

இந்நிலையில் வீரசேகரன், சுதிஷ்குமார், புவனேஸ்வர் எனும் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்கள் 3 பேர், நேற்று விடுமுறை என்பதால் பயன்படுத்தப்படாத அக்கட்டடத்தின் உள்ளே சென்று அமர்ந்து பேசிக் கொண்டிருந்துள்ளனர். இவர்கள் வெள்ளக்கரை பள்ளியில் பயின்றுவந்துள்ளனர். நேற்று இவர்கள் பேசிக்கொண்டிருந்த நேரத்தில், அக்கட்டடம் திடீரென சரிந்து விழுந்துள்ளது. இதில் 3 பேரும் உள்ளே சிக்கிக் கொண்டுள்ளனர்.

சத்தம் கேட்டு அருகிலிருந்தவர்கள் தீயணைப்பு துறைக்கும் காவல்துறைக்கும் தகவல் தெரிவித்துள்ளனர். தகவலின்பேரில் தீயணைப்பு துறை, காவல்துறை வந்து கட்டட இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்டு கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்திருக்கின்றனர். சிகிச்சையின்போது வீரசேகரன், சுதிஷ்குமார் எனும் இரு மாணவர்கள் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

அந்த கட்டடத்திற்குள் ஏன் இவர்கள் சென்றார்கள் என்பது, தற்போது சிகிச்சையில் இருக்கும் புவனேஸ்வர் கண்விழித்தால்தான் முழுமையாக தெரியுமென கூறப்படுகிறது. மாணவர்கள் உயிரிழந்ததை தொடர்ந்து, தமிழகத்தில் பயன்படுத்தப்படாத அனைத்து கட்டடங்களும் அங்கிருந்து அகற்றப்பட வேண்டும் என சுற்றுவட்டார கிராம மக்கள் வேண்டுகோள் வைத்துவருகின்றனர்.

இந்நிலையில், மாணவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்குவதாக தமிழக அரசு சார்பில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com