“விருது வாங்குனது ரொம்ப சந்தோஷம்...” - மகிழ்ச்சியில் திளைத்த ஆயி பூரணம் அம்மாள்

குழந்தைகளின் கல்விக்காக 7 கோடி ரூபாய் மதிப்புள்ள தனது நிலத்தினை தானமாக வழங்கிய மதுரையை சேர்ந்த ஆயி பூரணம் அம்மாளுக்கு ’முதலமைச்சரின் சிறப்பு விருது’ வழங்கப்பட்டுள்ளது.
ஆயி பூரணம் அம்மாள்
ஆயி பூரணம் அம்மாள் புதிய தலைமுறை

சென்னை மெரினா கடற்கரை உழைப்பாளர் சிலை அருகே, சுதந்திர இந்தியாவின் 75 ஆவது குடியரசு தினவிழா இன்று காலை எட்டு மணி அளவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்களால் கொடி ஏற்றப்பட்டு கொண்டாடப்பட்டது.

இதன் பிறகு பல்வேறு துறைகளில் சாதனை புரிந்த நபர்களுக்கு பதகங்களையும் விருதுகளையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் தனது ரூ.7 கோடி மதிப்பிலான 1.52 ஏக்கர் நிலத்தினை அரசு பள்ளி கட்டுவதற்காக நன்கொடையாக வழங்கிய ஆயி பூரணம் அம்மாள் அவர்களுக்கு முதலமைச்சரின் சிறப்பு விருதினை வழங்கி முதலமைச்சர் ஸ்டாலின் கௌரவப்படுத்தினார்.

விருது குறித்து புதியதலைமுறைக்கு பேட்டி அளித்த ஆயி பூரணம் அம்மாள், “முதலமைச்சரின் கையால் விருது வாங்கியது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. என்னுடன் பிறந்தவர்கள் 5 பேரும், தங்களின் தங்கை முதலமைச்சரிடம் விருது வாங்கியுள்ளார் என்று மிகவும் பெருமையாக கூறுகிறார்கள். மதுரை மாவட்டம் மேலூர் அருகேயுள்ள கொடிக்குளம்தான் எனது கிராமம். எனது தந்தை எங்கள் வீட்டில் உள்ள ஒவ்வொரு குழந்தையையும் நன்றாக படிக்க வைக்க வேண்டும் என்று விரும்பினார். ஆனால் படிப்பதற்கு யாரும் விரும்பவில்லை. மேலும் நாங்கள் படித்த பள்ளியிலும் 5 ஆம் வகுப்பு வரைதான் இருந்தது.

இதன் காரணமாகத்தான் நன்றாக குழந்தைகள் படிக்க வேண்டும் என்று இந்த நிலத்தினை பள்ளிக்குக் கொடுத்தேன். பணமாக கொடுப்பதைவிட நிலமாக கொடுத்தால் சரியாக இருக்குமென நினைத்தேன். வெள்ள நிவாரண நிதிக்கு உதவிய சிறுவன், இன்று முதல்வரிடம் விருது வாங்கிய இளைய தலைமுறையினர் போல இங்குள்ள எல்லா குழந்தைகளும் படித்து நல்ல நிலைமைக்கு வரவேண்டும் என்பதற்காகதான் நான் இதை வழங்கினேன்.

ஆயி பூரணம் அம்மாள்
EXCLUSIVE | “தமிழ்நாடு அரசு எங்களை அங்கீகரித்துள்ளது” - ‘மதநல்லிணக்க விருது’ குறித்து முகமது ஜுபைர்!

என்னை பொறுத்தவரை பெரிய சவால்கலை எதிர்த்துதான் இந்த இடத்தில் என்னால் வரமுடிந்தது. அதுவும் எனது கணவர், மகளை இழந்து இந்த இடத்தில் வந்து நிற்கிறேன். ஆகவேதான் சொல்கிறேன்... பெண்கள் எல்லா சவால்களையும் தகர்த்தெறிந்துவர வேண்டும்.

பெண்களுக்கு கல்விதான் அழிக்க முடியாத செல்வம். ஆகவே கல்விக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று என் சார்பில் நான் வேண்டுகோள் வைக்கிறேன்” என்றார்.

ஆயி புராணம் அம்மாளின் வாழ்க்கை, அனைவருக்கும் உற்சாகத்தையும் நம்பிக்கையையும் தந்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com