முதல்வர் பழனிசாமி இன்று டெல்லி பயணம்... கூட்டணி குறித்து பேச வாய்ப்பு!
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று டெல்லி செல்கிறார். காவிரி-குண்டாறு இணைப்புத் திட்டம் குறித்து பிரதமரிடம் பேச இருக்கும் முதலமைச்சர், அதிமுக பாஜக கூட்டணியையும் உறுதி செய்வார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
தேர்தல் நெருங்கும் வேளையில் எதிர்பார்ப்பை ஏற்படுத்துகிறது முதல்வரின்டெல்லி பயணம். 79.75 கோடி ரூபாய் மதிப்பில் ஃபீனிக்ஸ் பறவை வடிவில் அமைக்கப்பட்டு வரும் ஜெயலலிதா நினைவிடத்தின் கட்டுமானப் பணிகள் இறுதிகட்டத்தை எட்டி இருக்கும் நிலையில், அதன் திறப்பு விழாவிற்கு பிரதமரை அழைக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
2 நாள் பயணமாக இன்று மதியம் டெல்லி புறப்படும் முதலமைச்சர், பிரதமர் நரேந்திர மோடி உடனான சந்திப்பிற்கு பின், உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோரை சந்திக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. முதல்வருடன், தலைமைச்செயலாளர் சண்முகம் உள்ளிட்ட உயர் அதிகாரிகளும் டெல்லி செல்ல இருக்கிறார்கள்.
தலைநகர் டெல்லியில் உள்ள புதிய தமிழ்நாடு இல்லத்தில் தமிழக முதல்வர் தங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு, பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது. இன்று இரவு அங்கு ஓய்வு எடுக்கும் தமிழக முதல்வர், நாளை காலை 10 மணி அளவில், பிரதமர் நரேந்திர மோடியை லோக் கல்யாண் மார்க்கில் உள்ள அவரது இல்லத்தில் சந்திக்க இருக்கிறார்.
இந்த சந்திப்பின்போது, காவிரி-குண்டாறு இணைப்புத் திட்டம் குறித்து பேச இருக்கும் பழனிசாமி, ஜெயலலிதா நினைவிட திறப்பு விழாவிற்கும், சென்னை மெட்ரோ ரயிலின் புதிய வழித்தடத்திற்கான இயக்கத்தை தொடக்கி வைப்பதற்கும், அவரது நேரத்தை கேட்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. அத்துடன் விரைவில் வர இருக்கிற தமிழக சட்டப்பேரவை தேர்தல் தொடர்பாகவும், கூட்டணி தொடர்பாகவும் பல்வேறு முக்கிய விவகாரங்கள் தொடர்பாகவும் பேசுவார் எனத் தெரிகிறது.
அண்மையில் தமிழகம் வந்த உள்துறை அமைச்சர் அமித்ஷா, தான் பங்கேற்ற அரசு விழாவிலேயே அ.தி.மு.க-பாரதிய ஜனதா கூட்டணி தொடரும் என்பதை உறுதிபட தெரிவித்தார். இருந்தாலும் கூட்டணிக்கு யார் தலைமை வகிப்பது, கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் யார்? என்ற விவகாரங்கள் தொடர்பாக பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த தலைவர்கள் பலரும் பல்வேறு கருத்துகளை தெரிவித்து வந்ததால் சலசலப்பு ஏற்பட்டது. அப்பிரச்னைக்கு முடிவு கட்டும் வகையில் கடந்த சில நாட்களுக்கு முன் தமிழகம் வந்த பா.ஜ.க.பொறுப்பாளர் சி.டி.ரவி, தமிழகத்தில் முதன்மையான கட்சி என்ற அடிப்படையில் அ.தி.மு.க.தான் முதல்வர் வேட்பாளரை முடிவு செய்யும் என தெரிவித்திருந்தார். இருந்தாலும், முடிவுக்கு வராத இந்த பிரச்சனைக்கு தீர்வு காணும் வகையில், எடப்பாடி பழனிசாமி பிரதமருடன் பேசுவார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
அதே நேரத்தில் 20 நிமிடங்களுக்கு மேலாக இந்த சந்திப்பு நடைபெற இருப்பதாகக் கூறப்படும் நிலையில், தமிழகத்துக்கான திட்டங்கள், நிதி விடுவிப்பு குறித்தும் கோரிக்கை மனுக்களையும் முதல்வர் அளிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதமரை தவிர்த்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் சில மத்திய அமைச்சர்களை சந்திப்பதற்கும், தமிழக முதல்வர் தன்னுடைய டெல்லி பயணத்தின் பொழுது திட்டமிட்டுள்ளதாகவும், அதற்கான நேரங்கள் ஒதுக்கீடு செய்வதற்காக அனுமதி கோரப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த சந்திப்புகளை முடித்துக்கொண்டு 19ஆம் தேதி மாலை சென்னை திரும்புகிறார் முதலமைச்சர். வழக்கமான பயணமாக இருந்தாலும், தேர்தல் நெருங்கும் வேளையில் நடைபெற இருப்பதால், பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது எடப்பாடி பழனிசாமியின் இரண்டு நாள் டெல்லி பயணம்.