வெற்றிடம் என்றார்கள்.. ஆனால் வெற்றியிடமாக மாற்றியுள்ளார் முதல்வர் பழனிசாமி- கடம்பூர் ராஜூ

வெற்றிடம் என்றார்கள்.. ஆனால் வெற்றியிடமாக மாற்றியுள்ளார் முதல்வர் பழனிசாமி- கடம்பூர் ராஜூ
வெற்றிடம் என்றார்கள்.. ஆனால் வெற்றியிடமாக மாற்றியுள்ளார் முதல்வர் பழனிசாமி- கடம்பூர் ராஜூ

தமிழகத்தில் வெற்றிடம் ஏற்பட்டுள்ளதாக பலர் கூறினர். அதனை வெற்றியிடமாக முதல்வர் மாற்றியுள்ளார் என்று  செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ தெரிவித்தார்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியம் பாண்டவர்மங்கலத்தில் ரூ.45 லட்சம் மதிப்பில் பசுவந்தனை முதல் மந்தித்தோப்பு வரை சாலை அமைக்கும் பணிகள், கோவில்பட்டி செண்பகவல்லி அருகில் ரூ.75 லட்சம் மதிப்பில் பாலம் அமைக்கும் பணிகள், லாயல்மில் மேம்பாலத்தின் இருபுறமும் சர்வீஸ் ரோடு ரூ.18.50 லட்சம் மதிப்பில் அமைக்கும் பணிகள், வள்ளுவர் நகர் பகுதியில் உள்ள 13 தெருக்களுக்கு ரூ.2.20 கோடி மதிப்பீட்டில் பேவர் பிளாக் அமைக்கும் பணிகள் தொடக்க விழா இன்று நடைபெற்றது.

இதில் தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கட்பூர் செ.ராஜூ கலந்து கொண்டு பணிகளை தொடங்கி வைத்தார். இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்...


" மு.க.ஸ்டாலினுக்கு வேற்றுமையாகத்தான் தெரியும். மு.க.ஸ்டாலின் வெற்றிடத்தினை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கிறார். அதிமுக வெற்றியை நோக்கி சொன்று கொண்டு இருக்கிறது. தமிழகத்தில் வெற்றிடம் ஏற்பட்டுள்ளதாக பலர் கூறினர். அதனை வெற்றியிடமாக முதல்வர் மாற்றியுள்ளார். எம்.ஜி.ஆர் தொடர்ந்து 3 முறை வெற்றி பெற்றது போன்று, தற்பொழுது உள்ள அதிமுக ஆட்சியும் தொடர் வெற்றி பெற்றுவிடும் என்பதால் மு.க.ஸ்டாலினுக்கு பயம்.

அதிமுக ஹாட்ரிக் வெற்றி பெற போகிறது என்பதை மு.க.ஸ்டாலின் செல்லும் இடங்களில் கண் கூடாக பார்க்கிறார். முதல்வர் இயல்பாக தேர்தல் பிரச்சாரம் செய்கிறார். மு.க.ஸ்டாலின் கார்ப்பரேட் கம்பெனியால் இயக்கப்படுகிறார். மு.க.ஸ்டாலின் இயந்திரமாக செயல்படுவதாக திமுக தொண்டர் கடிதம் எழுதும் நிலை உள்ளது. மக்களை நேரிடையாக சந்திக்கும் தைரியம் திமுகவிற்கு இல்லை, 2011ல் சொன்ன தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றிய காரணத்தால் 2016 தேர்தலில் அதிமுக தனியாக நின்று வெற்றி பெற்று ஆட்சி அமைத்த வரலாறு படைத்தது.

2006-ல் திமுக 2 ஏக்கர் இலவச நிலம் தருவதாக தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்தனர். ஆனால் நிறைவேற்றவில்லை. நிலம் வழங்கவில்லை என்றாலும் பரவாயில்லை, அடுத்தவர்களின் நிலங்களை அபகரித்த ஆட்சியாக திமுக ஆட்சி இருந்தது. கட்டப் பஞ்சாயத்து, அதிகார மையங்கள் திமுக ஆட்சியில் இருந்தன. திமுக ஆட்சிக் காலத்தில் 5 முதல்வர்கள் இருந்தனர். 5 மண்டலங்களாக பிரித்து குடும்ப ஆட்சி நடத்தியதால் மக்கள் வீட்டிற்கு அனுப்பி வைத்தார்கள்.

இந்தியை எதிர்த்து போராட்டம் நடத்தியது அண்ணா தலைமையில் இருந்த திமுக. தற்போதுள்ள திமுக கிடையாது. இந்தி போராட்டத்தின்போது ரயில் வராத தண்டவாளத்தில் தலை வைத்து நாடகம் நடத்தியவர் கருணாநிதி. கேந்திரிய வித்யாலயா பள்ளியில் தமிழுக்கு பதில் ஹிந்தி கற்பிக்கப்படுவதாக கூறும் திமுக எம்.பிக்கள் அவர்களுக்கு ஒதுக்கப்படும் இடஒதுக்கீட்டை தவிர்க்க வேண்டும் என்று தெரிவித்து இருந்தேன். அவ்வாறு செய்து இருந்தால் திமுக எம்.பிகள் தமிழ் உணர்வினை பாராட்டலாம். ஆனால் இவர்கள் தங்களுக்கு கிடைத்த ஒதுக்கீட்டை பயன்படுத்தி மாணவர்களை சேர்த்து விட்டு, பின்னர் தமிழ், தமிழ் என்று பிழைப்புக்காக தமிழை பயன்படுத்துகின்றனர்.

நான் இதை சொன்னால் திமுக டி.கே.எஸ்.இளங்கோவன் மாற்றி பேசுகிறார். மாற்றி பேசுவதில் திமுகவினர் வல்லவர்கள். கேந்திரிய வித்யாலயா பள்ளியில் தங்களுக்கு கிடைக்கும் இடங்களை திமுக எம்.பிக்கள் விலைக்கு விற்பனை செய்கிறார்கள் என்பது ஊரறிந்த உண்மை. தமிழ் போனாலும், அழிந்தாலும் பரவாயில்லை. தங்களுக்கு வருமானம் வேண்டும் என்று நினைப்பவர்கள் ஊழலை பற்றியும், தமிழை பற்றியும் பேசுகின்றனர். தயாநிதிமாறன் மத்திய அமைச்சராக இருந்து ஹிந்தியில் பேசியதை பாராட்டியவர் கருணாநிதி. இரட்டைவேடம் போடுவது திமுகவிற்கு கைவந்த கலை” என்றவரிடம் அமைச்சர்கள் சசிகலா பற்றி பேசுவதற்கு தயக்கம் காட்டுவது ஏன் என்ற கேள்விக்கு...


“அதிமுகவிற்கும் அவங்களுக்கும் (சசிகலாவிற்கும்) சம்பந்தம் இல்லை. அவங்க ஒரு கட்சி ஆரம்பித்து விட்டனர். அதிமுக யாருக்கும் அஞ்சாது, பனங்காட்டு நரி சலசலப்புக்கு அஞ்சாது. தேவையில்லாதவர்களை பற்றி, தேவையில்லமால் பேச வேண்டிய தேவையில்லை என்பதால் யாரும் பேசுவதில்லை என்றார்.

அதிமுகவை மீட்க அமமுக தொடங்கப்பட்டுள்ளதாக டி.டி.வி.தினகரன் கூறியது பற்றி கேட்டதற்கு... “ஒரு கட்சியை தொடங்குவதற்கு காரணம் சொல்ல வேண்டும், அதைதான் டிடிவி தினகரன் சொல்கிறார். கமல்ஹாசன் கட்சி ஆரம்பித்தற்கு ஒரு காரணம் சொல்கிறார். இப்படி ஒவ்வொருவரும் கட்சி ஆரம்பித்ததற்கு ஏதவாது காரணத்தை கண்டுபிடிப்பார்கள். அப்படி ஒரு காரணத்தை டி.டிவி தினகரன் கண்டுபிடித்துள்ளார். எந்த காலத்திலும் எதையும் யாரும் கைப்பற்றப் போவதில்லை” என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com