
சென்னை கோயம்பேட்டில் உள்ள தூய தாமஸ் கல்லூரியில் மாநில சிறுபான்மையினர் ஆணையம் சார்பில் நடைபெறும் கலைஞர் நூற்றாண்டு விழா மற்றும் அனைத்துக் கல்லூரி மாணவ - மாணவியருக்கான பேச்சுப் போட்டியில் வெற்றிபெற்ற மாணாக்கர்களுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது. இதில், தமிழகத்தில் உள்ள 38 மாவட்டங்களில் கல்லூரி அளவில் நடைபெற்ற பேச்சு போட்டியில் வெற்றி பெற்ற 234 பேருக்கு தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் பரிசுகளை வழங்கினார்.
மாநில அளவில் முதல் பரிசு பெற்ற மாணவிக்கு ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலையும், 8 கிராம் தங்க சங்கிலியும்; இரண்டாம் பரிசு பெற்றவர்களுக்கு ஐம்பதாயிரம் ரூபாய்க்கான காசோலையும், 6 கிராம் தங்க சங்கிலியும்; மூன்றாம் பரிசு பெற்றவருக்கு 25 ஆயிரம் ரூபாய்க்கான காசோலையும் நான்கு கிராம் தங்க சங்கிலியும் வழங்கப்பட்டன.
“எப்போதும் என்னை சுறு சுறுப்பாக இருக்க ஊக்கம் கொடுப்பவர்கள் மாணவர்கள் தான். தலைநிமிரும் தமிழகம் என்ற எண்ணத்தை மாணவர்களிடம் கொண்டு சேர்க்கும் முயற்சி தான் இந்த பேச்சு போட்டி. பேச்சாற்றலை தமிழ் நிலம் பயன்படுத்திய வரலாறை எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டும். திராவிட இயக்கம் பேசி பேசி வளர்ந்த இயக்கம். திராவிட இயக்கம் எழுதி எழுதி வளர்ந்த இயக்கம். நான் ஆற்றலுடன் ஓரளவிற்கு பேசுவதற்கு காரணம் பீட்டர் அல்போன்ஸ் தான்.
சட்டமன்றத்தில் அமைதியாக இருக்கக் கூடாது எழுந்து பேசுங்கள் என எனக்கு அறிவுரை வழங்கியவர் பீட்டர் அல்போன்ஸ். திமுக ஆட்சி அமைக்கும் போதெல்லாம் சிறுபான்மையினர் நலனுக்காக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது. சிறுபான்மையினர் விடுதி, புத்த பூர்ணிமா, ரம்ஜான் உள்ளிட்ட சிறுபான்மையின பண்டிகைகளுக்கு சிறப்பு உணவு வழங்கப்படுகிறது. ஹஜ் பயணம் மேற்கொண்ட 3987 பேருக்கு ரூ.10 கோடி நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது”
“சமத்துவம், சகோதரத்துவம், சுயமரியாதை, பகுத்தறிவு என்று பண்பட்ட தமிழ் அறிவை எல்லா மாணவர்களும் பெற வேண்டும். ஒற்றுமையில் வேற்றுமை இல்லாத நமது சமூகத்தை வழிநடத்த வேண்டும். மனிதநேயத்தை போற்றுங்கள். மனதை அழுக்காக்கும் கருத்தியல்களை புறந்தள்ள வேண்டும். நல்லிணக்கத்தின் பண்பை மாணவர்களாகிய நீங்கள் தொடர்ந்து எடுத்துச் செல்லுங்கள்” என்றார்.
இந்நிகழ்ச்சியில் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் ஆகியோர் கலந்து கொண்டனர்.