முதல்வர் மு.க.ஸ்டாலின், உயிரிழந்த மாடுபிடி வீரர் நவீன் குமார்
முதல்வர் மு.க.ஸ்டாலின், உயிரிழந்த மாடுபிடி வீரர் நவீன் குமார்PT

ஜல்லிக்கட்டில் உயிரிழந்த மாடுபிடி வீரரின் குடும்பத்தினருக்கு நிவாரணம் - முதல்வர் அறிவிப்பு

மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியில் உயிரிழந்த மாடுபிடி வீரரின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்துள்ளதோடு நிதியுதவியையும் அறிவித்துள்ளார்.
Published on

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் நேற்று ஜல்லிக்கட்டு போட்டி வெகு விமர்சையாக நடைபெற்றது. நேற்றைய போட்டியின்போது மதுரை விளாங்குடி பகுதியைச் சேர்ந்த மாடுபிடி வீரர் நவீன் குமார் என்பவரை மாடு முட்டியதில் படுகாயம் அடைந்தார். அதையடுத்து ஆபத்தான நிலையில் இருந்த அவரை, மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு கொண்டு சென்றநிலையில், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த சம்பவம் அவனியாபுரத்தில் சோகத்தை ஏற்படுத்தியது. இதனையடுத்து, மாடுபிடி வீரர்கள், சமூக ஆர்வலர்கள் பலரும் உயிரிழந்த மாடுபிடி வீரரின் குடும்பத்தினரின் நிதியுதவி வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து இருந்தனர். இயக்குநர் அமீரும் வலியுறுத்தி பதிவு ஒன்றினை இட்டிருந்தார்.

நேற்று அவனியாபுரம் மற்றும் இன்று பாலமேடு ஜல்லிக்கட்டில் வெற்றி பெற்ற வீரர்களும் இதனை கோரிக்கையாக முன் வைத்தனர்.

இந்நிலையில், அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியில் உயிரிழந்த மாடுபிடி வீரரின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்துள்ளதோடு நிதியுதவியையும் அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “மதுரை மாவட்டம், அவனியாபுரத்தில் நேற்று (14.01.2025) நடைபெற்ற ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியில் மதுரை மாவட்டம், மதுரை வடக்கு வட்டம், விளாங்குடியைச் சேர்ந்த திரு.நவீன்குமார் என்ற மாடுபிடி வீரர் மாடு முட்டியதில் காயமடைந்து உடனடியாக சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டுசெல்லும் வழியில் உயிரிழந்தார் என்ற துயரகரமான செய்தியைக் கேட்டு மிகுந்த வருத்தமும் வேதனையும் அடைந்தேன்.

உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கும். அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு. உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு மூன்று இலட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்” என்று முதல்வர் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com