'நாங்குநேரி சம்பவம் நடுக்கத்தை ஏற்படுத்துகிறது; இளம் மாணவர்களிடம் கூட சாதிய நச்சு' - முதல்வர் வேதனை

'நாங்குநேரி சம்பவத்தில் சட்டம் அதன் கடமையைச் சரியாகச் செய்யும்' என்று தெரிவித்துள்ளார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
முதல்வர் ஸ்டாலின்
முதல்வர் ஸ்டாலின்கோப்புப்படம்

நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் சாதிரீதியான விரோதம் காரணமாக பிளஸ்2 மாணவர் மற்றும் அவரது தங்கை ஆகியோர் அரிவாளால் வெட்டப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. படுகாயம் அடைந்த இருவரும் நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த தாக்குதல் தொடர்பாக 17 வயதுடைய பிளஸ்-2 வகுப்பு மாணவர்கள் 4 பேர் மற்றும் 2 சிறார் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக வேதனை தெரிவித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அவர் கூறியிருப்பதாவது:-

நாங்குநேரி சம்பவம்
நாங்குநேரி சம்பவம்

''நாங்குநேரியில் நடந்த சம்பவம் நடுக்கத்தை ஏற்படுத்துகிறது. இளம் மாணவர்களிடம் கூட சாதிய நச்சு எந்தளவுக்கு ஊடுருவி இருக்கிறது என்பதையே இது காட்டுகிறது. சக மனிதரை நமக்குச் சமமான ஒருவராக அடையாளம் காணாமல் சாதி வேறுபாடும் மாறுபாடும் பார்த்து வெறுப்பதும், அத்தகைய வெறுப்பை வன்முறையாக வெளிப்படுத்துவதும் இன்னும் தொடர்வது சகிக்க முடியாததாக இருக்கிறது.

இந்தச் சம்பவத்தில் கொடூரமாகத் தாக்கப்பட்ட மாணவர்களின் மருத்துவம் மற்றும் கல்விச் செலவை ஏற்க இருப்பதாக மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவித்திருக்கிறார். குற்றச் சம்பவத்தில் தொடர்புடையவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள். சட்டம் அதன் கடமையைச் சரியாகச் செய்யும்.

அதே நேரத்தில் மாணவர்கள் மனதில் சமூக நல்லுறவை விதைப்பதை அனைவரும் கடமையாகக் கொள்வோம். குறிப்பாக ஆசிரியர் சமூகமானது, இது போன்ற நன்னெறிகளை ஊட்ட வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.

வெறுப்பு மனம் கொண்டவர்களால் எந்த வெற்றியையும் அடைய முடியாது. பேசும் மொழியால் நாம் அனைவரும் ஒரு தாய் மக்கள்! நமக்குள் வெறுப்புணர்வும் ஏற்றத் தாழ்வு எண்ணமும் கூடாது என்பதை இளைய சமுதாயம் உணர்ந்து நடந்து கொள்ள வேண்டும்'' என்று தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com