திருச்சி | ”மக்கள் மீதானதே உண்மையான நாட்டுப்பற்று” - சாரண சாரணியர் இயக்க விழாவில் முதல்வர் உரை!
செய்தியாளர்: லெனின்.சு
பாரத சாரண சாரணியர் இயக்கத்தின் வைரவிழா பெருந்திரளணி மற்றும் முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு பெருந்திரளணி நிறைவு விழா திருச்சிராப்பள்ளி மாவட்டம், மணப்பாறை சிப்காட் வளாகத்தில் இன்று நடைபெற்றது. இதில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று விழா பேருரையாற்றினார். இவ்விழாவில் பேசிய அவர், “இந்திய அளவிலும் உலக அளவிலும், தமிழகத்திற்கு புகழை பெற்றுத்தந்தது, நமது பள்ளி கல்வித்துறை. இத்துறையின் அமைச்சரான அன்பில் மகேஸ் பொய்யாமொழி, கொரானா காலத்திற்கு பின்னர் இல்லம் தேடி கல்வித்திட்டத்தை சிறப்பாக நடைமுறைப்படுத்தி, பள்ளி மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தை உயர்ந்திக்காட்டி ஒன்றிய அரசின் பாராட்டை பெற்றுத்தந்தார். அவரை குழந்தைப் பருவத்தில் இருந்தே எனக்கு தெரியும். அவரது தந்தை பொய்யாமொழி எனது நண்பர். அவர் தற்போது நம்மிடையே இல்லை. அப்பா இல்லையே என்ற வருத்தம் ஒருபக்கம் இருந்தாலும், மகேஸ் பணியாற்றி சாதனைபடைப்பதைப் பார்த்து, எனது நண்பரின் இடத்தில் இருந்து நான் மகிழ்ச்சியடைகிறேன்.
சாரணர் இயக்கம் உடலையும், உள்ளத்தையும் உறுதிசெய்யும் இயக்கமாக உள்ளது. நாட்டுப்பற்று என்பது நிலத்தின் மீதான பற்று அல்ல. மக்கள் மீதான உண்மையான பற்றே நாட்டுப்பற்றாகும். கலைஞர் தமிழகத்தின் நவீன சிற்பி. அவர்தான் தமிழகத்தில் பல்கலைக்கழகங்களை துவக்கினார். சாரண சாரணியர் இயக்க 75ஆவது ஆண்டு விழாவோடு, முத்தமிழ் அறிஞர் கலைஞரின் நூற்றாண்டு விழாவையும் இணைத்து கொண்டாடுவது பொருத்தமானது. தமிழக அரசு சார்பில் 10 கோடி ரூபாய் செலவில் பாரத சாரண சாரணியர் இயக்கத்திற்கான தலைமை அலுவலகம் கட்டித்தரப்படும். பல மாநிலங்களில் இருந்து வந்துள்ள மாணவர்கள், இங்கு கூடாரங்களில் பிரிந்து இருந்தாலும் , மதம், இனம், மொழி கடந்து மனதளவில் ஒன்றுபட்டு இருக்கவேண்டும்” என்றார். மேலும், பல்வேறு மொழி வார்த்தைகளை பயன்படுத்தி சாரண சாரணியர்களுக்கு முதல்வர் நன்றி தெரிவித்துக்கொண்டார்.