உலகம் முழுவதும் கொரோனா அதிகரிப்பதால் இதனை முதலில் செய்யணும்! - தமிழக முதல்வர் அறிவிப்பு
உலக நாடுகளில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
ஆசிய, ஐரோப்பிய நாடுகளில் கொரோனா தொற்றின் எண்ணிக்கை அதிகரித்து வரும் சூழ்நிலையில், முதல்வர் தலைமையில் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. அதில், தமிழ்நாட்டில் தற்போது வரையில், முதல் தவணை தடுப்பூசி போடாத சுமார் 50 லட்சம் நபர்கள் மற்றும் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டிய சுமார் 1.32 கோடி நபர்களை கண்டறிந்து, அனைத்து மாவட்டங்களிலும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், மாவட்ட நிர்வாகத்துடன் ஒருங்கிணைத்து, அப்பகுதியில் வாரந்தோறும் சனிக்கிழமைகளில் நடத்தப்படக்கூடிய தடுப்பூசி முகாம்களை முழுமையாக பயன்படுத்தி தடுப்பூசி செலுத்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.
மாவட்ட அளவில் முழுமையாக 100% தடுப்பூசி செலுத்திய உள்ளாட்சி அமைப்புகளை கண்டறிந்து, அவர்களை மாவட்ட ஆட்சித்தலைவர்கள் கௌரவிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்றும், இதர உள்ளாட்சி அமைப்புகள் 100% தடுப்பூசி செலுத்திய நிலையை அடைய ஊக்குவிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
மேலும், கை கழுவுதல், முகக் கவசம் அணிதல், தனிமனித இடைவெளியை பின்பற்றுதல் ஆகியவற்றை மக்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.