முதல்வரான பிறகு முதல் முறையாக மு.க.ஸ்டாலின் இன்று டெல்லி பயணம்: பிரதமருடன் சந்திப்பு

முதல்வரான பிறகு முதல் முறையாக மு.க.ஸ்டாலின் இன்று டெல்லி பயணம்: பிரதமருடன் சந்திப்பு
முதல்வரான பிறகு முதல் முறையாக மு.க.ஸ்டாலின் இன்று டெல்லி பயணம்: பிரதமருடன் சந்திப்பு

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை டெல்லி புறப்பட்டுச் செல்கிறார். நீட் தேர்வு, ஹைட்ரோ கார்பன் திட்டம் மற்றும் 7 பேர் விடுதலை தொடர்பாக அவர், பிரதமர் மோடியுடன் பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ்நாடு முதலமைச்சராக பொறுப்பேற்ற பின்னர் முதல்வர் மு.க.ஸ்டாலின், தலைநகர் டெல்லிக்கு முதன்முறையாக பயணம் மேற்கொள்கிறார். அவருடன் திமுகவைச் சேர்ந்த மக்களவை மற்றும் மாநிலங்களவை எம்பிக்கள் சிலரும் டெல்லி செல்கின்றனர். டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் மு.க.ஸ்டாலினுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு அரசின் சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ்.விஜயன் செய்துள்ளார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாலை 5 மணியளவில் பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. அப்போது பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை மு.க.ஸ்டாலின் பிரதமரிடம் அளிக்கிறார். மத்திய அரசு தொடர்புடைய நீட் தேர்வு விவகாரம், ஹைட்ரோ கார்பன் பிரச்னை, ஏழு பேர் விடுதலை உள்ளிட்டவை தொடர்பாக பிரதமரிடம் மு.க.ஸ்டாலின் பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. செங்கல்பட்டில் கொரோனா தடுப்பூசி உற்பத்தியை தொடங்குவது குறித்தும் பிரதமரிடம் முதலமைச்சர் வலியுறுத்துவார் எனத் தெரிகிறது.

பின்னர் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்திக்கும் மு.க.ஸ்டாலின், தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு தர வேண்டிய ஜி.எஸ்.டி. பாக்கித் தொகையை உடனே விடுவிக்கும்படி கேட்டுக்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. தொடர்ந்து உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோரை சந்தித்து மீனவர்கள் பிரச்னை குறித்து விரிவான ஆலோசனை நடத்தவிருக்கிறார். பின்னர் ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயலை சந்திக்கும் மு.க.ஸ்டாலின், தமிழ்நாட்டின் ரயில் திட்டங்களுக்கு பற்றி பேசுவார் எனத் தெரிகிறது.

நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்தையும் சந்திக்க திட்டமிட்டுள்ள மு.க.ஸ்டாலின், காவிரிப்பிரச்னை குறித்து அவருடன் விரிவாக விவாதிக்கிறார். அதனைத்தொடர்ந்து டெல்லியில் கட்டப்பட்டு வரும் திமுக கட்சி அலுவலக கட்டுமானப் பணிகளையும் ஸ்டாலின் பார்வையிடுவார் எனக் கூறப்படுகிறது.

இன்றிரவு டெல்லியில் தங்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நாளை காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ஆகியோரை சந்தித்துப் பேசுகிறார். அப்போது மாநிலங்களவை உறுப்பினர் பதவி குறித்தும் விவாதிக்கப்படலாம் என்று காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com