“வள்ளலாரை பற்றி ஒருவர் உளறுகிறார்” - ஆளுநரை மறைமுகமாக விமர்சித்த முதல்வர் ஸ்டாலின்
சென்னை கே.கே.நகர் இ.எஸ்.ஐ.மருத்துவமனை இயக்குனரும், துர்கா ஸ்டாலினின் சகோதரருமான மருத்துவர் ஜெய.இராஜமூர்த்தியின் இல்ல திருமணத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் நடத்தி வைத்து உரையாற்றினார்.
அங்கு மேடையில் பேசிய முதல்வர், ''பல்வேறு பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதால் பெரும்பாலும் எங்களை போன்றவர்களுக்கு குடும்பத்தாரிடம் அதிகம் நேரம் இருக்க முடியவில்லை என்ற ஆதங்கம் இருக்கும். ஆனால் இது போன்ற திருமண நிகழ்ச்சிகளால் அந்த ஆதங்கம் குறையும். இன்று வள்ளலாரை குறித்து ஒருவர் பேசி கொண்டு வருகிறார். பேசிக்கொண்டு கூட இல்லை, புலம்பி கொண்டுள்ளார், உளறி கொண்டு உள்ளார். அவர் யார் என்று உங்களுக்கு எல்லாம் தெரியும். (ஆளுநரை மறைமுகமாக சாடும் முதல்வர்)
இன்றைக்கு நாடு சென்று கொண்டிருக்கக்கூடிய சூழல் உங்கள் எல்லோருக்கும் தெரியும். ஆனால் தமிழகத்தில் திராவிட மாடல் ஆட்சி எழுச்சியோடு நடைபெறுகிறது. இதே போல் இந்திய நாட்டிற்கும் ஒரு ஆட்சி தேவை. ஒன்றியத்தில் இருக்கும் பாஜக ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்து இன்றுவரை தேர்தல் நேரத்தில் அறிவித்த திட்டங்களை நிறைவேற்றவில்லை. அதற்கு நேர் எதிர் மாறாக மக்கள் விரோத போக்குகளையும் மதத்தையும் மக்களிடத்தில் திணித்து சர்வாதிகார ஆட்சியை செய்து கொண்டு இருக்கிறார்கள்.
பொது சிவில் சட்டம் மூலம் பாஜகவின் கொள்கைகளை செயல்படுத்த முனைகிறது மத்திய அரசு. பாஜகவை எதிர்ப்பவர்களை பழிவாங்கும் நோக்கத்துடன், சிபிஐ, வருமான வரித்துறை, அமலாக்கத்துறை போன்ற துறைகளை வைத்து மிரட்ட கூடிய ஆட்சி மத்தியில் நடைபெறுகிறது.
இன்று நடைபெறும் திருமணத்தை தங்கள் குடும்ப திருமண நிகழ்வு என அனைவரும் பெருமையுடன் பேசுகின்றனர். இதனை கேட்டால் பிரதமருக்கு கோபம் கூட வந்துவிடும். ஏனென்றால், மத்தியப் பிரதேசம் சென்றால் கூட பிரதமருக்கு திமுக நினைவு தான் வருகிறது. அங்கு போய் கூட குடும்பத்திற்காக ஆட்சி நடத்துகிறார்கள் எனப் பேசுகிறார்.
ஆமாம் இது குடும்ப கட்சி தான், தமிழ்நாடே திமுக குடும்பம் தான் என அழுத்தம் திருத்தமாகதெரிவித்துக்கொள்கிறேன். பிறக்கும் குழந்தைகளுக்கு அழகான தமிழ் பெயர்களை சூட்டுங்கள் என்று கோரிக்கை விடுகிறேன்'' என்றார்

