இலங்கை தமிழர்களின் வாழ்வாதாரம் மேம்பட பல்வேறு திட்டங்களை அறிவித்த முதல்வர் மு.க.ஸ்டாலின்

இலங்கை தமிழர்களின் வாழ்வாதாரம் மேம்பட பல்வேறு திட்டங்களை அறிவித்த முதல்வர் மு.க.ஸ்டாலின்
இலங்கை தமிழர்களின் வாழ்வாதாரம் மேம்பட பல்வேறு திட்டங்களை அறிவித்த முதல்வர் மு.க.ஸ்டாலின்

முகாம்கள் மற்றும் வெளிப்பகுதிகளில் தங்கியிருக்கும் இலங்கை தமிழர்களின் கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் அவர்களது வாழ்வாதாரம் மேம்பட சட்டப் பேரவையில் பல்வேறு அறிவிப்புகளை முதல்வர் முக.ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். 

சட்டப் பேரவையில் தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் பேசும்போது “முகாம்களில் வாழும் இலங்கை தமிழர்களின் குழந்தைகளின் கல்வி மேம்பட 50 மாணவர்களுக்கான கல்வி மற்றும் விடுதி கட்டணத்தை அரசே ஏற்கும். அரசு கல்லூரிகளில் படிக்கும் இலங்கை தமிழ் மாணவர்களின் கல்வி உதவித் தொகை உயர்த்தப்படும். பாலிடெக்னிக்கில் படிக்கும் மாணவர்களுக்கான உதவித்தொகை 10 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும்.

இலங்கை தமிழர்களுக்கு வேலைவாய்ப்பு அளித்து அவர்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்திடவும், அவர்கள் தங்களது வேலை வாய்ப்புத் தகுதியை உயர்த்திக் கொள்ளவும், வேலைவாய்ப்புடன் கூடிய திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்க 10 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்.

சிறு, குறு தொழில் செய்திட ஏதுவாக முகாம்களில் உள்ள 300 சுயஉதவிக் குழுக்களுக்கு சுழல்நிதி மற்றும் சமுதாய முதலீட்டு நிதியாக ஒவ்வொரு சுயஉதவிக் குழுவுக்கும் தலா ஒரு லட்சத்தி 25 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்.

கடந்த ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட 301 சுயஉதவிக் குழுக்களுக்கு ஏற்கெனவே வழங்கப்பட்ட 50 ஆயிரம் ரூபாயோடு மேலும், 75 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். இதற்காக நடப்பு நிதியாண்டில் 6 கோடியே 16 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

முகாமில் வசிப்பவர்களின் வாழ்வாதாரத்திற்காக மாதந்தோறும் அவர்களுக்கு பணக்கொடை வழங்கப்பட்டு வருகிறது. இந்த தொகையானது குடும்பத் தலைவருக்கு ஆயிரம் ரூபாயும், இதர பெரியோர்களுக்கு 750 ரூபாயும், 12 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு 400 ரூபாயும் தற்போது வழங்கப்பட்டு வருகிறது. இந்த பணக்கொடை கடந்த 10 ஆண்டுகாலமாக உயர்த்தப்படாத நிலையில், இனி குடும்பத் தலைவருக்கு மாதந்தோறும் 1500 ரூபாய், இதர பெரியவர்களுக்கு 1000 ரூபாய், 12 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு 500 ரூபாய் என உயர்த்தி வழங்கப்படும். இதனால் அரசுக்கு ஆண்டொன்றுக்கு கூடுதலாக 21 கோடியே 40 லட்சம் ரூபாய் செலவாகும்.

முகாமில் உள்ள இலங்கை தமிழர்களுக்கு ஏற்கெனவே வழங்கப்பட்டு வரும் மண்ணெண்ணை ஒதுக்கீடு மிக குறைந்த அளவிலேயே உள்ளது. பிரதம மந்திரி உஜ்வாலா திட்டத்தின் கீழ் இவர்கள் எரிவாயு இணைப்பு பெற இயலாத நிலை உள்ளது. எனவே ஒவ்வொரு குடும்பத்திற்கும் விலையில்லா எரிவாயு இணைப்பு மற்றும் இலவச அடுப்பு வழங்கப்படும். இதற்காக அரசிற்கு ஒருமுறை 7 கோடி ரூபாய் செலவினம் ஏற்படும்.

அது தவிர, குடும்பத்திற்கு 5 எரிவாயு உருளைக்கு தலா 400 ரூபாய் வீதம் மானியத்தொகை வழங்கப்படும். இதற்காக 3 கோடியே 80 லட்சம் ரூபாய் ஆண்டுதோறும் ஒதுக்கீடு செய்யப்படும். தற்போது இவர்களுக்கு வழங்கப்படும் 20 கிலோவிற்கு மேல் வழங்கப்படும் அரிசிக்கு, கிலோ ஒன்றுக்கு 55 பைசா வீதம் மானியம் வழங்கப்படுகிறது. இனி இதனை ரத்துசெய்து அவர்கள் பெரும் முழு அரிசி அளவும் விலையில்லாமல் வழங்கப்படும். இதற்கான செலவுத் தொகையான 19 லட்சம் ரூபாயை அரசே ஏற்றுக்கொள்ளும்.

முகாமில் வசிக்கும் இலங்கை தமிழர்களுக்கு கோ-ஆப் டெக்ஸ் மூலம் ஒவ்வொரு ஆண்டும் இலவச ஆடைகளும், இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை இலவச போர்வைகளும் வழங்கும் திட்டத்தில், ஒன்றிய அரசு நிர்ணயித்த விலையில் ஆடைகளை வாங்கி வழங்க இயலாத நிலையில், நடப்பு ஆண்டிற்கு பெறப்பட்ட விலை புள்ளிகளின் அடிப்படையில் குடும்பம் ஒன்றிற்கு 1790 ரூபாயிலிருந்து 3473 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும். இதற்காக அரசிற்கு ஆண்டொன்றிற்கு 3 கோடி ரூபாய் கூடுதல் செலவாகும்.

இலங்கை தமிழர்களுக்கு ஒன்றிய அரசு நிர்ணயித்துள்ள 250 ரூபாய் மதிப்பில் 8 வகையான சமையல் பாத்திரங்களை ஒவ்வொரு குடும்பத்திற்கும் இலவசமாக வழங்க இயலாத நிலையில், 1296 ரூபாய் மதிப்பில், சேலம் இந்திய உருக்காலை நிறுவனம் மூலம் உயர்த்தப்பட்ட விகிதத்தில் பாத்திரங்கள் வழங்கப்படும். இதனால் அரசுக்கு 1 கோடியே 97 லட்சம் ரூபாய் கூடுதலாக செலவாகும்.

முகாமில் வசிக்கும் அகதிகளுக்கும், வெளிபகுதிகளில் உள்ள அகதிகளுக்கும் அடிப்படை வசதிகளை மேம்படுத்திட குடியுரிமை வழங்குதல் மற்றும் இலங்கை திரும்பும் அகதிகளுக்கு தகுந்த ஏற்பாடுகள் செய்தல் போன்ற நீண்டகால தீர்வினை கண்டறிய ஏதுவாக, சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சருடன், ஒரு நாடாளுமன்ற உறுப்பினர், ஒரு சட்டப் பேரவை உறுப்பினர், பொதுத்துறை செயலாளர், மறுவாழ்வுத் துறை இயக்குநர் மற்றும் பிற அரசு அலுவலர்கள், அரசு சாரா உறுப்பினர்கள், முகாம்வாழ் இலங்கை தமிழர்களின் பிரதிநிதி மற்றும் வெளிப்பகுதிகளில் வசிக்கும் அகதிகளுக்கான பிரதிநிதி ஆகியோரை உள்ளடக்கிய ஒரு ஆலோசனை குழு விரைவில் அமைக்கப்படும்.

இலங்கை தமிழர்களின் நலம் பேணிட இந்த அரசு, வீடு மற்றும் இதர கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தலுக்கு 261 கோடியே 54 லட்சம் ரூபாய், கல்வி மற்றும் வேலைவாய்ப்பினை உறுதி செய்திட 12 கோடியே 25 லட்சம் ரூபாயும், அவர்களது வாழ்க்கை தரத்தை மேம்படுத்திட 43 கோடியே 61 லட்சம் ரூபாய் என மொத்தம் 317 கோடியே 40 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்” என்பதை இந்த மாமன்றத்திற்கு மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com