பள்ளிகளை எப்போது திறக்கலாம்? - முதல்வர் இன்று ஆலோசனை
தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது குறித்தும் 10-ஆம் வகுப்பு தேர்வு மையங்கள் அமைப்பது குறித்தும் முதலமைச்சர் பழனிசாமி இன்று ஆலோசனை நடத்துகிறார்.
கொரோனா வைரஸ் தொற்றால் தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மார்ச் 17-ஆம் தேதி தொடங்கிய விடுப்பு தற்போது வரை தொடர்ந்து வருகிறது. இதனிடையே பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு கட்டாயம் நடைபெறும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். அதன்படி பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு கால அட்டவணையும் வெளியிடப்பட்டுள்ளது.
ஜூன் 15 ஆம் தேதி தொடங்கும் தேர்வு ஜூன் 25 ஆம் தேதி முடிவடைகிறது. இதனால் பள்ளிகள் எப்போது திறக்கப்படும், தேர்வு மையங்கள் எங்கு அமையும் என்பது குறித்து மாணவர்களிடையே குழப்பம் நிலவி வருகிறது.
இந்நிலையில் தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது குறித்தும் 10-ஆம் வகுப்பு தேர்வு மையங்கள் அமைப்பது குறித்தும் முதலமைச்சர் பழனிசாமி, அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் கல்வி உயரதிகாரிகளுடன் இன்று ஆலோசனை நடத்துகிறார்.