இந்திய சுதந்திரத்திற்காக பாடுபட்ட வாளுக்கு வேலி! யார் இவர்? அப்படி என்ன செய்தார்?
ஆங்கிலேயர்களை எதிர் கொண்டு தனது இன்னுயிரை துறந்த வாளுக்கு வேலியின் வீரத்தை போற்றும் விதமாக, அவரது சொந்த ஊரான நகரம் பட்டியில் மணி மண்டபம் அமைத்து, சிலையையும் நிறுவி பெருமைப்படுத்தி உள்ளது தமிழக அரசு.
சிவகங்கையில் நடைபெற்ற விழாவில் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், வாளுக்கு வேலியின் சிலையையும், மண்டபத்தையும் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.
இந்திய சுதந்திரத்திற்காக தனது இந்நியரை நீத்த பல வீரர்களில் சிவகங்கை மாவட்டம் பாகனேரி அடுத்த நகர பட்டி கிராமத்தைச் சேர்ந்த வாளுக்கு வேலி அம்பலமும் ஒருவர். மருது சகோதரர்களின் போர்படை தளபதியாகவும், ஆங்கிலேயர்களை எதிர்க்க மருது சகோதரர்களுக்கு அரணாகவும் இருந்தவர் தான் இந்த வாளுக்கு வேலி.
வீரபாண்டிய கட்டபொம்மன் ஆங்கிலேயர்களால் தூக்கிலிடப்பட்ட நிலையில், அவரது தம்பி ஊமைத்துரையையும் தேடிய போது, அவர் மருது சகோதரர்களிடம் அடைக்கலம் புகுந்தார்.
இதனை தெரிந்து கொண்ட ஆங்கிலேயர்களை ஊமைத்துரை ஒப்படைக்க மருது சகோதரர்களை வலியுறுத்தியும் அதற்கு இணங்கததால், மருது சகோதரர்கள் மீது ஆத்திரமடைந்த ஆங்கிலேயர்கள் மருது சகோதரர்களை கொலை செய்யும் சூழ்ச்சியில் இறங்கினர்.
அந்த சூழ்ச்சியை பலமுறை வாளுக்கு வேலி அம்பலம் தடுத்ததால் ஆங்கிலேயர்கள் கோபம் இவர் மீது திரும்பியது.
ஒரு சமயத்தில் திருப்பத்தூரில் இருக்கும் இஷ்ட தெய்வத்தை வழிபட வழக்கமாக செல்லும் வழியில் மறித்து ஆங்கிலேயர்கள் கொல்ல திட்டம் தீட்டினர் இதனை அறிந்த வாளுக்கு வேலி, மருது சகோதரர்களை மாற்று வழியில் மாறு வேடமிட்டு அழைத்துச் சென்று பத்திரமாக இருப்பிடத்திற்கு கொண்டு வந்து சேர்த்துள்ளார்.
இதனால் வாளுக்கு வேலி மீது மேலும், ஆத்திரமடைந்து அவர் செல்லும் வழியில் அகழி அமைத்து அதில் விழ வைத்தனர்.
குதிரையில் வந்த வாளுக்கு வேலி ஆங்கிலேயரின் சூழ்ச்சிபடி அகழியில் விழுந்த உடன் ஆங்கிலேயர்களின் சூழ்ச்சியில் சிக்கிக் கொண்டதை அறிந்து, ஆங்கிலேயர்களின் கையில் சிக்குவதை விரும்பாது வாளுக்கு வேலி தன்னுயிரை தானே மாய்த்துக் கொண்டார்.
இதை சிறுகதை மன்னன் என்று அழைக்கப்பட்ட தென்னரசு ஒரு சிறு புத்தகமாக வெளியிட, அதனைப் படித்த கலைஞர் வாளுக்கு வேலியின் வீரத்தை "தென்பாண்டி சிங்கம்" என்ற விரிவான புத்தகமாக வெளியிட்டார்.
இதுதான் வாளுக்கு வேலியின் வீரத்தையும், தியாகத்தையும் வெளி உலகத்திற்கு கொண்டு வந்த முக்கிய காரணியாக அமைத்தது. இந்நிலையில், வாளுக்கு வேலியின் வீரத்தை போற்றும் வகையில் 2023இல் அவரது பிறந்த தினத்தை அரசு விழாவாக கொண்டாட தமிழக அரசு அறிவித்தது.
அதுமட்டும் அன்றி, அவர் பிறந்த ஊரில் மணிமண்டபமும் சிலையும் அமைக்க வேண்டும் என்று நகரம் பட்டி மக்கள் தொடர்ந்து உள்ளூர் அமைச்சர் கே.ஆர்.பெரிய கருப்பனிடம் கோரிக்கை வைத்து வந்தனர். அதன் அடிப்படையில், கடந்தாண்டு நகரம்பட்டியில் அதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்று வந்தது.
இந்நிலையில், இன்று மணி மண்டபத்தையும், அதில் அமைக்கப்பட்டுள்ள வாளுக்கு வேலு அம்பலத்தின் உருவச்சலையையும், முதலமைச்சர் மு.க .ஸ்டாலின் திறந்து வைத்து, விடுதலை போராட்ட வீரரின் தியாகத்திற்கு பெருமை சேர்த்துள்ளார்.