வேகமெடுக்கும் கொரோனா: ஜூன் 15-ல் மருத்துவ நிபுணர் குழுவுடன் முதலமைச்சர் ஆலோசனை
தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் முதலமைச்சர் பழனிசாமி நாளை மறுநாள் மருத்துவ நிபுணர் குழுவுடன் ஆலோசனை நடத்த உள்ளார்.
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. குறிப்பாக சென்னையில் ஒரு நாளைக்கு சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். சமீப காலமாக சென்னையில் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
இதனால் சென்னையில் மீண்டும் முழு முடக்கம் அமல்படுத்தப்படுமா என்ற கேள்வி அனைவரது மத்தியிலும் எழுந்தது. ஆனால் முதலமைச்சர் பழனிசாமி, தற்போதைக்கு முழு முடக்கம் செய்யும் திட்டமில்லை எனத் தெரிவித்தார். தமிழக அரசு உயர்நீதிமன்றத்திலும் இதே பதிலையே கூறியது. மேலும், மருத்துவ நிபுணர் குழுவுடன் கலந்தாலோசித்து அவ்வப்போது முடிவு எடுத்து வருகிறோம் எனவும் தெரிவித்தது.
கொரோனா பரவல் குறித்து மருத்துவ நிபுணர் குழுவின் பிரதீப் கவுர் தனது ட்விட்டர் பக்கத்தில் “சமூக இடைவெளி, முகக்கவசம் அணிதல், கிருமிநாசினி கொண்டு அடிக்கடி கைகழுவுதல் போன்ற பொது சுகாதார நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் கொரோனா பரவுவதற்கான சங்கிலியை உடைக்க வேண்டும் எனவும்” கூறியுள்ளார்.
இந்நிலையில், தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது குறித்து நாளை மறுநாள் முதலமைச்சர் பழனிசாமி மருத்துவ நிபுணர் குழுவுடன் ஆலோசனை நடத்த உள்ளார்.