
தமிழ்நாட்டில் கொரோனா பொதுமுடக்க கட்டுப்பாடுகளில் மேலும் தளர்வுகள் அளிப்பது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சனிக்கிழமையன்று பல்வேறு துறைகளின் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார்.
தமிழ்நாட்டில் கொரோனா பரவல் தடுப்புக்காக அமலில் உள்ள பொதுமுடக்கத்தில் மக்களின் நலன் மற்றும் வாழ்வாதாரம் கருதி பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. நவம்பர் ஒன்றாம் தேதி பள்ளிகள் திறப்பு உள்ளிட்ட தளர்வுகள் ஏற்கனவே அளிக்கப்பட்டுள்ளன. மேலும் தளர்வுகள் அளிப்பது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சனிக்கிழமையன்று பல்வேறு துறைகளின் உயரதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார். சென்னை - தலைமைச் செயலகத்தில் சனிக்கிழமை காலை 11.30 மணிக்கு நடைபெற உள்ள ஆலோசனையில், சுகாதாரத் துறை உள்ளிட்ட தமிழ்நாடு அரசுத் துறைகளின் உயர் அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர். பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், அதுகுறித்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் கூடுதல் தளர்வுகள் அளிப்பது குறித்தும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளது. நவம்பர் 4 ஆம் தேதி தீபாவளி என்பதால், பண்டிகைக் காலத்தில் மேற்கொள்ள வேண்டிய கட்டுப்பாடுகள் குறித்தும் ஆலோசனைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளன.