'மொழிக்காக முதலில் வருபவர்கள் தமிழர்கள்' - உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பெருமிதம்

'மொழிக்காக முதலில் வருபவர்கள் தமிழர்கள்' - உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பெருமிதம்
'மொழிக்காக முதலில் வருபவர்கள் தமிழர்கள்' - உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பெருமிதம்

மொழிக்காக எப்போதும் முதலாவதாக வருபவர்கள் தமிழர்கள் என பெருமிதம் தெரிவித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா, தற்போதைய தொழில்நுட்ப வசதிகளை பயன்படுத்தி, உயர்நீதிமன்றங்களில் மாநில மொழிகளில் வழக்காடுவது குறித்து விரைவில் தீர்வு காணப்படும் என உறுதி தெரிவித்தார்.

''எல்லாருக்கும் வணக்கம்... நிகழ்ச்சியில் பங்கேற்றது ரொம்ப சந்தோஷம்'' என தமிழில் உரையை துவங்கிய ரமணா, முதல் முறையாக சென்னை வந்தது குறித்து மகிழ்ச்சி தெரிவித்த அவர்,

"ஓர்ந்துகண் ணோடாது இறைபுரிந்து யார்மாட்டும்
தேர்ந்துசெய் வஃதே முறை" என்ற குறளை மேற்கோள்காட்டி, தங்கள் உரிமையை நீதிமன்றம் பாதுகாக்கும் என மக்கள் நம்புகின்றனர் எனக் குறிப்பிட்டார்.

சென்னை வழக்கறிஞர்கள் நீதித்துறையை வலுப்படுத்தும் பணிகளில் முக்கிய பங்காற்றுவதாகவும், அரசியல் சாசன வரைவு பணியில் எராளமான தமிழர்கள் பங்கேற்றுள்ளதாகவும் பட்டியலிட்ட உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரமணா, அரசியல் சாசன கடமையை நிறைவேற்றுவது என்பது சுமையான பணி தான் என்ற போதும், அதை சிறப்பாக செய்து வருவதாகவும் குறிப்பிட்டார்.

ஆக்கப்பூர்வமான தீர்வுகள் காணும் போது நீதிபதிகள் கண்மூடி சட்டத்தை மட்டும் சார்ந்திருக்க முடியாது எனவும், சமூக உண்மையை உணர வேண்டும் எனவும் கூறிய அவர், உடனடி காப்பி, உடனடி நூடுல்ஸ் போல உடனடி நீதியையும் எதிர்பார்க்கின்றனர் எனவும், அது நீதியை கொன்று விடுகிறது என்றும் தெரிவித்தார்.

மொழி, அடையாளம் ஆகியவற்றால் பெருமைமிக்க தமிழர்கள், மொழிக்காக எப்போதும் முதலாவதாக வருவார்கள் என கூறிய தலைமை நீதிபதி ரமணா, விசாரணையை வழக்காடிகள் புரிந்து கொள்ளும்படி இருக்க வேண்டும் எனவும், திருமணத்தில் ஓதப்படும் மந்திரங்களை போல விசாரணை புரிந்து கொள்ளததாக இருக்க கூடாது என வலியுறுத்தினார்.

நீதிமன்ற விசாரணைகளில் மாநில மொழிகளை பயன்படுத்துவதில் சில சிக்கல் உள்ள போதும், தற்போதைய தொழில்நுட்ப வசதிகளை பயன்படுத்தி, உயர் நீதிமன்றங்களில் மாநில மொழிகளில் வழக்காடுவது குறித்து விரைவில் தீர்வு காணப்படும் என உறுதி தெரிவித்தார்.

நீதித்துறை காலியிடங்களை நிரப்புவதை பொறுத்துவரை 1,104 உயர் நீதிமன்ற நீதிபதி பணியிடங்களில் 388 காலியிடங்கள் உள்ளதாகவும், அவற்றை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிகளை கேட்டுக் கொண்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

வழக்குகள் எண்ணிக்கைக்கு ஏற்ப உள்கட்டமைப்பு வசதிகளை அதிகரிக்க வேண்டும் எனக் கூறிய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரமணா, நீதித்துறை உள்கட்டமைப்புக்கு தேவையான நடவடிக்கைகளை எடுப்பதாக முதலமைச்சருக்கு வாழ்த்துகள் கூறியதுடன், வழக்கறிஞர்கள் நலனுக்காக பாடுபடுவதற்கு பாராட்டும் தெரிவித்தார்.

நீதித்துறையை மேம்படுத்த முதல்வர் முழு ஒத்துழைப்பு வழங்குவதாக உயர் நீதிமன்ற தலைனை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி கூறியதையும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரமணா குறிப்பிட்டார். ஆணும் பெண்ணும் ஓரென கொள்வதால் அறிவில் ஓங்கி தழைக்கும் என்ற பாரதியார் பாடலை மேற்கோள்காட்டிய தலைமை நீதிபதி ரமணா, நீதிபதி பதவிக்கு வர ஆண் - பெண், இடம், இனம், மொழி உள்ளிட்ட எவையும் தடையாக இருக்க கூடாது என வலியுறுத்தினார்.

உச்ச நீதிமன்றத்தின் கிளையை துவங்குவது குறித்து திமுக எம்.பி. வில்சன், மாநிலங்களவையில் தனிநபர் மசோதா அறிமுகம் செய்துள்ளதை சுட்டிக்காட்டிய தலைமை நீதிபதி ரமணா, அதன் மீது மத்திய அரசு என்ன முடிவு எடுக்கப்போகிறது எனத் தெரியவில்லை என்ற போதும், உச்ச நீதிமன்றத்தை வழக்கறிஞர்கள் எளிதில் அணுக ஏதுவாக காணொலி காட்சி மூலம் வழக்குகளை தொடர்ந்து விசாரிப்பது என சக நீதிபதிகளுடன் கலந்து பேசி முடிவெடுத்துள்ளதாக தெரிவித்தார்.

நிக்ழ்ச்சியில் பேசிய உச்ச நீதிமன்ற நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ், சட்டக் கல்வி இயக்குநர் பதவி காலியாக உள்ளது. அதற்கு உரிய மாவட்ட நீதிபதியை நியமிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார். 

உச்ச நீதிமன்ற நீதிபதி ராமசுப்பிரமணியன், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரமணா, சென்னை மாகாணமாக இருந்த போது தமிழகத்தில் தான் படித்தார் என்பதால் அவரை மண்ணின் மைந்தராக ஏற்றுக் கொள்ளலாம் எனவும், முதல் இந்திய நீதிபதி ராஜமன்னார் தெலுங்கர் தான். தமிழ் நிலம் தான் ஏராளமான தெலுங்கு நீதிபதிகளை உருவாக்கியுள்ளது எனக் குறிப்பிட்டார்.

தமிழகத்தில் நீதித்துறை செயல்பாடு என்பது முன்னணியில் உள்ளது எனவும் 1.33 லட்சம் வழக்குகளில் 1.46 வழக்குகள் முடித்து வைக்கப்பட்டுள்ளதாக பாராட்டிய அவர், கீழமை நீதிமன்றங்களில் 90 சதவீதம் வழக்குகள் முடித்து வைக்கப்பட்டுள்ளதாகவும், இது நாட்டில் பெரிய சாதனை எனவும் புகழ்ந்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com