ரத்ததானம் செய்து 9-வது நாளாக போராட்டத்தை தொடரும் மருத்துவ மாணவர்கள்
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் ராஜா முத்தையா கல்லூரி நிர்வாகத்தை கண்டித்து 9-வது நாளாக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். போராட்டத்தின் ஒரு பகுதியாக மாணவ, மாணவிகள், இன்று ரத்த தானம் செய்தனர்.
அரசு மருத்துவக் கல்லூரி என்று குறிப்பிட்டு மாணவர் சேர்க்கை நடத்திவிட்டு, தனியார் கல்லூரிகளைக் காட்டிலும் கூடுதலாக கட்டணம் வசூலிக்கப்படுவதாகக் கூறி அண்ணாமலைப் பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரி மாணவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். 9-வது நாளாக போராட்டத்தை தொடர்ந்த அவர்கள், மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அளிக்கப்படும் ரத்தம் கூட விற்கப்படுவதாக குற்றம்சாட்டினர். இதனைக் கண்டிக்கும் விதமாக அவர்கள், ரத்த தானம் செய்தனர்.
100-க்கும் அதிகமான மருத்துவ மாணவ, மாணவிகள், ரத்தத்தை தானம் செய்தனர். 300-க்கும் அதிகமானோர் முன்வந்தும் ரத்தத்தைப் பாதுகாக்க வசதி இல்லாததால் 100 பேர் மட்டும் 100 லிட்டர் ரத்தத்தை தானம் செய்தனர். அரசே ஏற்று நடத்தும் கல்லூரியில் அரசு மருத்துவக் கல்லூரிகளின் கட்டணமே வசூலிக்கப்படவேண்டும், அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்பட வேண்டும் என்றும் மாணவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.