ஜல்லிக்கட்டு கலாச்சார அடையாளம்: விஸ்வநாதன் ஆனந்த்
ஜல்லிக்கட்டு தமிழர்களின் கலாச்சார அடையாளம் என்று கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த் கருத்து தெரிவித்துள்ளார்.
ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு அனுமதி கோரி தமிழகம் முழுவதும் தீவிரமடைந்து வரும் போராட்டத்துக்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், தமிழகத்தைச் சேர்ந்த சர்வதேச கிராண்ட் மாஸ்டரான விஸ்வநாதன் ஆனந்தும் ட்விட்டர் வயிலாக தனது ஆதரவுக் குரலை எழுப்பியுள்ளார்.
இது தொடர்பான அவரது பதிவில், தமிழகம் மீண்டும் அமைதியான முறையில் எழுச்சி கண்டுள்ளது. தமிழனாக இருப்பதில் பெருமிதம் கொள்கிறேன். அடுத்த தலைமுறை இளைஞர்கள் நவீனமாக இருந்தாலும் கலாச்சாரத்தில் வேர்களை தன்னகத்தே கொண்டுள்ளனர். கலாச்சாரத்தின் அடையாளமாக விளங்கும் ஜல்லிக்கட்டுக்கு உரிய மரியாதை அளிக்க வேண்டும். நானும் விலங்குகள் பாதுகாப்பு மீது அக்கறை கொண்டவன் தான். ஆனால், இந்த இடத்தில் மரபு என்ற ரீதியில் ஜல்லிக்கட்டு போட்டியை பார்க்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.